லேபிள்கள்

26.8.18

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் தெலுங்கானா முன்னிலை

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையால், தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒதுக்கீடு முறையில் ஆசிரியர்களின்
எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்த விருது மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டது.கடந்த ஆண்டு தமிழ்நாட்டில், 22 பேர் பெற்றனர். நடப்பாண்டில் ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டு, சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு மேற்கொண்டது.தமிழகத்தில், 100க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்ததில், தமிழக அரசு, ஆறு பேரை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதில், சென்னை ரேஷ்மி, கோவை சதி, காஞ்சிபுரம் மாதவன், கரூர் செல்வ கண்ணன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பீட்டர்ராஜா, திருவள்ளூர் சாந்தி ஆகியோர் இடம் பெற்றனர்.கடந்த, 16 முதல், 21ம் தேதி வரை இவர்களுக்கு டில்லியில் நேர்காணல் நடந்தது. இந்தியா முழுவதும், 157 பேர் பங்கேற்றதில், 45 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழகத்தில், கோவையை சேர்ந்த ஆசிரியை சதி மட்டுமே, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிக்கிம், தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அதிகபட்சமாக, தலா, மூவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.மற்ற மாநிலங்களில் ஒன்று, இரண்டு என்ற அளவிலேயே உள்ளது. செப்., 5ல் டில்லி விஞ்ஞான் பவனில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நல்லாசிரியர் விருதை வழங்குகிறார்.செப்., 4ல் இவர்கள், பிரதமர் மோடியுடன் உரையாடுகின்றனர்.செப்., 3 பிற்பகல் முதல், 6ம் தேதி முற்பகல் வரை மத்திய அரசின் விருந்தினர்களாக, டில்லியில் தங்கியிருப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக