லேபிள்கள்

31.7.13

இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோர் பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல்

சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருவதால், சிக்குவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 122 துவக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 36 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள், 30 மழலையர் பள்ளிகள், ஒரு உருது மேல்நிலை பள்ளி, ஒரு தெலுங்கு மேல்நிலை பள்ளி என, மொத்தம் 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், 5,000க்கும் அதிகமான ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

1995 முதல் நியமனம்:

துவக்க பள்ளிகளில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள், 1995ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். இதற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.ஆனால், அப்போது பணி நியமனம் பெற்ற பலர், முறையான ஆசிரியர் பயிற்சி பெறாமல், போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்துஇருப்பதாக, சமீபத்தில் புகார் எழுந்தது.இதுகுறித்து மாநகராட்சி கல்வி துறை கவனத்திற்கு வந்ததும், விரிவான விசாரணை நடத்த 'விஜிலென்ஸ்' அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

போலி நிறுவனம்:

விசாரணையில், ஆசிரியர்கள் பணி நியமனத்தில் போலி சான்றிதழ் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் மீதான மோசடி, ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆசிரியர்கள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை என்றும், சிலர் கொடுத்த சான்றிதழ்களில் பயிற்சி பெற்றோர் வெளி இடத்தில் பணிபுரிந்து வருவதும், பெயர் மாற்றம் செய்து மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்து உள்ளது.ஆனால், எத்தனை பேர் இந்த மோசடியில் ஈடுபட்டனர் என்ற முழு விவரம் கிடைக்கவில்லை. அது குறித்து இன்னும் விசாரணை நடக்கிறது.இதுகுறித்து, கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போலி சான்றிதழ் மோசடி குறித்து 'விஜிலென்ஸ்' அலுவலரின் விரிவான விசாரணை நடந்து வருகிறது. தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கை மாநகராட்சி கமிஷனருக்கு தாக்கல் செய்யப்படும். அதன் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

400 பேர் மோசடி?

இந்த விவகாரம் குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:எங்களுக்கு தெரிந்த வரை 400 பேர் வரை போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்தது.ஏற்கனவே கமிஷனராக இருந்த விஜயகுமார், போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக சிலர் மீது நடவடிக்கை எடுத்தார். முழு விசாரணை நடப்பதற்குள் அவர் மாற்றம் செய்யப்பட்டார். தற்போது மாநகராட்சி இது தொடர்பாக விசாரணை நடத்துவதால், மீண்டும் போலி சான்றிதழ் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என, நினைக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


அனுமதி பெறாத பேருந்து நிழற்குடைகள் அமைத்து, பல கோடி ரூபாய் மோசடி நடந்த விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. அடுத்தகட்டமாக ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்திருப்பதால், மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது.ஆசிரியர்கள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை என்றும், சிலர் கொடுத்த சான்றிதழ்களில் பயிற்சி பெற்றோர் வெளி இடத்தில் பணிபுரிந்து வருவதும், பெயர் மாற்றம் செய்து மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக