லேபிள்கள்

19.10.13

"சுமாரான' மாணவர்களுக்கு டியூஷன்"

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு சமீபத்தில் முடிந்து, விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.காலாண்டு தேர்வு முடிவுகளில் ப்ளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் திருச்சி மாவட்டத்தில் 60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ப்ளஸ் 2 தேர்வில் கடந்தாண்டு 93 சதவீத தேர்ச்சியை மேலும், அதிகரிக்கும் நோக்கில், காலாண்டு தேர்வில் குறைந்த மார்க் பெற்ற ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டத்தில் உள்ள 199 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, தினமும் காலை 8.30 மணி முதல், 9.30 மணி வரை ஒரு மணி நேரமும், மாலை 4.30 மணி முதல், 6.30 மணி வரை என இரண்டு மணி நேரமும் பள்ளியிலேயே சிறப்பு வகுப்புகளை, ஆசிரிய ஆசிரியைகள் நடத்துகின்றனர். சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி சார்பில் டீ, ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது.திருச்சி மாவட்டத்தில் முன்மாதிரியாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, திருச்சி மாவட்டம் வளநாடு, மணப்பாறை, முசிறி, லால்குடி அரசு பள்ளிகள், மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆகிய 5 பள்ளிகளை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், செல்வக்குமார் தத்தெடுத்துள்ளார்.இப்பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், அவரே நேரில் சென்று பாடம் நடத்துகிறார். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அப்பள்ளியில் பயிலும் தலா ஐந்து மாணவர்களை தத்தெடுத்து, அவர்களது தேர்ச்சிக்கு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.கடந்த கால தேர்வுகளில், இயற்பியல், கணிதம், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய நான்கு பாடத் தேர்வுகளில், அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதனால் இந்த நான்கு பாடங்களின் கேள்வி பதில்களை உள்ளடக்கிய கையேடு தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுவும் மாணவர்களுக்கு விரைவில் விநியோகம் செய்ய மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக