தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற உத்தரவு, சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில், அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கத்தின் செயலர், அருளப்பன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
பள்ளி கல்வித்துறை, 2011 நவம்பரில் பிறப்பித்த உத்தரவில், 'ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்த சட்டம் பொருந்தாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, பள்ளி கல்வித் துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆசிரியர்கள் சிலரது நியமனங்களுக்கு, தற்காலிக ஒப்புதல் வழங்கி, சம்பளம் வழங்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை, நீதிபதிகள் ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. சிறுபான்மை பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் சேவியர் அருள்ராஜ், அஜ்மல் கான், வழக்கறிஞர்கள் அருள்மேரி, காட்சன் சாமிநாதன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவில், குற்றம் காண முடியாது. தரமான கல்வியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வருவதற்கு முன், அரசு உதவி பெறும், உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகள் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால், அவர்கள் பணியில் நீடிக்க முடியாமல் போய் விடும்.
2012, 2013ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவு. பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் பயிற்சி வகுப்பு, டிப்ளமோ படிப்பு முடித்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும். தகுதியானவர்கள் என தெரிந்த பின் தான், ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். நியமித்த பின், தேர்வு எழுதி, தகுதி பெற வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.
எனவே, அரசாணை பிறப்பித்த தேதியில் இருந்து, தகுதித் தேர்வை அமல்படுத்தலாமா என்பதை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுவிடம், தமிழக அரசு விளக்கம் பெற வேண்டும். அரசாணைக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி வகுப்புகளை நடத்த, சிறுபான்மை பள்ளிகள் பரிசீலிக்கலாம். கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் வகுக்கப்பட்ட விதிகளை பின்பற்றும்படி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களை, அரசு கட்டாயப்படுத்த முடியாது. அதனால், 2011 நவம்பரில், பள்ளி கல்வித் துறை பிறப்பித்த உத்தரவு, சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களில், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக