தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நடைமுறையாகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதம் 1.7.2016-ல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் புதிய ஊதிய விகிதம் வழங்கப்படாத நிலையில் நாளது வரை அகவிலைப்படி உயர்வு வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. இது அரசு ஊழியர்களிடம் மிகுந்த வேதனையை உருவாக்கியுள்ளது. தீபாவளிக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை வழங்குவது என்பது பல ஆண்டு கால நடைமுறையாகும்.
எனவே, மத்திய அரசின் அறிவிப்புக்குக் காத்திருக்காமல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 1.7.2016 முதல் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு தீபாவளிக்கு முன்பு அத் தொகை ரொக்கமாக அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய தமிழகஅரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் 29-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை வருகிறது. மாத இறுதி நாளாக இருப்பதால் பொருளாதார நெருக்கடியுடனும், மனச்சுமையுடனும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளில் பண்டிகைக்கு முன்பு மாத ஊதியத்தை அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. தற்போது புதுச்சேரி அரசு, தீபாவளிக்கு முன்பு அக்டோபர் மாத ஊதியம்
வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஆகவே, தமிழக அரசு ஊழியர்களும் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அக்டோபர் மாத ஊதியத்தை முன்னதாக வழங்க வேண்டும்.
மேலும், தமிழக அரசில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பு ஆறு மாதம் என்பது ஒன்பது மாதமாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது அறிவித்தார். முதலமைச்சரின் மேற்கண்ட அறிவிப்பின் அடிப்படையில் மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதமாக உயர்த்தியதற்கான அரசாணை நாளது வரை வெளியிடப்படாமல் உள்ளது.
எனவே, முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி மகப்பேறு விடுப்பை ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதமாக உயர்த்தி அரசாணையை உடனடியாக வெளியிடவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக