தட்டம்மை -ரூபல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
தட்டம்மை -ரூபல்லா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
ஒன்பது மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள அனைவருக்கும் தட்டம்மை -ரூபல்லா என்ற தடுப்பூசி வழங்கும் திட்டத்தில், முதல் கட்டத்திலேயே தமிழகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தட்டம்மை -ரூபல்லா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 6 -ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
வழக்கமாக பிறந்து 10 மாதம் முதல் 12 மாதங்கள் வரை ஆன குழந்தைகளுக்கு முதல் தவணையும், 16 மாதம் முதல் 24 மாத வரையான குழந்தைகளுக்கு 2- ஆம் தவணையும் தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தத் தடுப்பூசி, தட்டம்மை மற்றும் ரூபல்லாவை கட்டுப்படுத்த வழங்கப்படும். ஏற்கெனவே தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும் இத்திட்டத்தின்கீழ் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.
அங்கன்வாடி மையங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும். மலைப் பகுதிகள், மாநகர குடிசைப் பகுதிகள், கட்டடப் பணிபுரியும் பிற மாநில மக்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுவின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தத் தடுப்பூசி குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமான தடுப்பூசிகளைப் போன்றே இதுவும் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் பயப்பட வேண்டாம். பெற்றோர், ஆசிரியர்களுக்கு இந்தத் தடுப்பூசி குறித்த கையேடு வழங்கப்படும்.
தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த தடுப்பூசி குறித்து யாரேனும் தவறான தகவல் பரப்பினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். சுகாதாரத் துறை செயர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்கக ஆணையர் மோகன் பியாரே உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக