லேபிள்கள்

15.10.17

மத்திய அரசின் தகுதிப் படிப்பில் சேர 15 லட்சம் ஆசிரியர்கள்..தயார்...!

தகுதிப் படிப்பை முடிக்காவிட்டால், வேலை யில் இருந்து நீக்கப்படுவர் என்ற கெடுவுக்கு பயந்து, நாடு முழுவதும்,15 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின், திறந்தவெளி படிப்பில் சேர்ந்துள்ளனர்;
தமிழகத்தில் மட்டும், 26 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். 

மத்திய மற்றும் தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2010 ஏப்ரலில் அமலானது. இந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தர விடப்பட்டது. இதற்காக,2014 வரை, ஐந்து ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தகுதி பெறவில்லை.

இதையடுத்து, ஐந்து ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கி, 'ஆசிரியராக பணிபுரிவோர், 2019 மார்ச், 31 க்குள், 'டெட்' தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர்' என, கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, தற்போது, 1 - 5ம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண் பெற்று, டிப்ளமா ஆசிரியர் படிப்புடன், 'டெட்' தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். 


எட்டாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண் எடுத்திருப்பதுடன், பட்டப்படிப்பு, பி.எட்., முடித்து, 'டெட்' தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இந்த கட்டுப்பாடுகளின்படி, பல ஆசிரியர்கள் தகுதி பெறாததால், பெரும்பாலான ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டது. இது குறித்து, மத்திய அரசிடம், பல்வேறு அமைப்புகள் மனு அளித்தன.அவற்றை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிசீலித்து, சலுகை திட்டம் ஒன்றை, கடந்த மாதம் அறிவித்தது.

அதன்படி, 'பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண்ணும் எடுக்காமல், 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெறாத வர்கள், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசியதிறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு, டிப்ளமா கல்வியியல் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்' என, சலுகை வழங்கப்பட்டது.ஆனால், 'சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவர்' என்றும், மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, கடந்த மாதம், 'ஆன் - லைன்' பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 26 ஆயிரத்து, 500 ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக, பீஹாரில், 2.85 லட்சம் ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். 

ம.பி., 1.90 லட்சம்; உ.பி., 1.95 லட்சம்; மேற்கு வங்கம், 1.69 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின் படிப்பில் சேர விண்ணப்பித்து உள்ளனர். ஆந்திரா, 8000; தெலுங்கானா, 17 ஆயிரத்து, 8௦௦ மற்றும் கேரளாவில், 831 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக