லேபிள்கள்

14.7.13

பாதுகாப்பை உறுதி செய்யாமல் சுற்றுலா அழைத்து செல்ல கூடாது: பள்ளிகளுக்கு கல்வி துறை உத்தரவு


 கடலில் மூழ்கி மதுரையை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால், 'சுற்றுலா செல்லும் இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாமலும், அனுமதி பெறாமலும் கல்வி சுற்றுலா செல்ல கூடாது' என்று பள்ளிகளுக்கு கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை திருநகர் சி.எஸ்.ராமச்சாரி மெட்ரிக்குலேஷன்

 
          பள்ளியை சேர்ந்த 42 மாணவர்கள், 71 மாணவிகள், 4 ஆசிரியர்களுடன் நேற்று முன்தினம் தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றனர். தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரைக்கு சென்றனர். அங்குள்ள கடலில் விளையாடிய போது, சதீஷ்குமார் (17), தேவானந்த்(17), விஷ்ணுதரன் (17), பரமேஸ்வரன் ஆகிய 4 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மீட்கப்பட்ட மாணவர்கள் பாலாஜி ராஜன், பாலமுருகன் ஆகியோருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

             மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலரிடமும், மெட்ரிக் பள்ளிகள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். மேலும், மதுரை மாவட்டத்தில் கல்வி சுற்றுலா சென்ற போது, விபத்து மற்றும் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்ததால், மதுரை மாவட்ட பள்ளிகளில் கல்வி சுற்றுலா செல்ல அனுமதி கிடையாது என கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. கல்வி துறையின் உத்தரவை மீறி, பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து சென்றது தெரிய வந்துள்ளது.

              இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவள்ளி கூறியதாவது: கல்வி சுற்றுலாவுக்கு இப்பள்ளி முன் அனுமதி பெறவில்லை. தகவல் கூட தெரிவிக்கவில்லை. கடற்கரை, நீர்நிலை, வனப்பகுதி மற்றும் பாதுகாப்பு இல்லாத பகுதிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்ல அனுமதிப்பதில்லை. சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்த பிறகே அனுமதி வழங்குகிறோம். பொதுவாக எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதால், அவர்களை சுற்றுலா அழைத்து செல்வதில்லை. தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 படித்தவர்கள். 113 மாணவ, மாணவிகள் சுற்றுலா சென்றுள்ளனர். குறைந்தபட்சம் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் சென்றிருக்க வேண்டும்.

                ஆனால், 4 ஆசிரியர்கள் மட்டும் உடன் சென்றுள்ளனர். அவர்களில் 3 பேர் ஆசிரியைகள். விதி மீறல் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும். இனிமேல் சுற்றுலா செல்ல தேர்வு செய்துள்ள இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாமலும், முன் அனுமதி பெறாமலும் மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமுதவள்ளி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக