ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற, நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி மதிப்பெண் அளவை குறைக்க, சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த, குமாரவேலு என்பவர் தாக்கல் செய்த மனு: நான், ஒரு மாற்றுத்திறனாளி. 2009ல், ஆசிரியர் கல்வியில் பட்டயப் படிப்பு முடித்துள்ளேன். கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், கலந்து கொண்டேன். 83 மதிப்பெண் பெற்றேன்; 90 மதிப்பெண் பெற்றால் தான், தகுதி பெற முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். 90 மதிப்பெண் என, நிர்ணயிக்கப்பட்டதை, குறைக்க வேண்டும். இதுகுறித்து, கடந்த ஏப்ரலில், அரசுக்கு மனு அனுப்பினேன். முன்னுரிமை அடிப்படையில், எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, "தகுதி மதிப்பெண்ணை தளர்த்த, யாரும் கோர முடியாது. ஆசிரியர் கல்விக்கான பட்டய தேர்வில், அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவரும், குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் தான், தேர்ச்சி பெற முடியும். அதுபோல், ஆசிரியர் தகுதி தேர்விலும் குறைந்தபட்சம், 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்," என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: "மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட எந்த பிரிவினரும், தகுதி மதிப்பெண்ணை குறைக்கும்படி கோர முடியாது" என, கூடுதல் அரசு பிளீடர் கூறியதில், நான் உடன்படுகிறேன். ஆசிரியர் தகுதி தேர்வில், 90 மதிப்பெண் பெற்றால் தான், இடைநிலை ஆசிரியராக நியமிப்பதற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத ஒதுக்கீட்டின் கீழான பரிசீலனைக்கு, மனுதாரர் வருவார்.
குழந்தைகளுக்கு தரமான கல்வியை போதிக்க வேண்டும் என்பதற்காக தான், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு, பறிக்கப்பட்டு விடவில்லை. இதே பிரச்னையை, இந்த ஐகோர்ட் ஏற்கனவே பரிசீலித்துள்ளது. எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது." இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக