·
கேள்விகளில் அச்சுப் பிழை உள்ளதால், முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறைதாலுகா மலையாடிப்பட்டியைச்சேர்ந்த அந்தோணி கிளாரா தாக்கல் செய்த மனு: முதுகலை தமிழ் பட்டப்படிப்புடன் பி.எட்., படித்துள்ளேன். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் 2013- முதுகலை உதவி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 2013 ஜூலை 21-ல் நடைபெற்றது.
·
இதில் தமிழாசிரியர் பணியிடத்துக்கான தேர்வை நான் எழுதினேன்.ஏ,பி,சி,டி என 4 வரிசைகளில் கேள்வித்தாள்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. "பி' வரிசை வினாத்தாள் எனக்கு தரப்பட்டது. அதில் அச்சுப்பிழைகள் இருந்தது குறித்து தேர்வு அறை மேற்பார்வையாளரிடம் தெரிவித்தேன்.
அதற்கு, அவர் தேர்வு வாரியச் செயலரிடம் முறையிடுங்கள் எனக் கூறிவிட்டார்.மற்ற 3 வரிசை கேள்வித்தாள்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவற்றில் அச்சுப்பிழைகள் இல்லாதிருந்தன.இந்த நிலையில், விடைகள் வெளியிடப்பட்டதும் சரிபார்த்தபோது கேள்விகளின் பொருள் மாறும் அளவுக்கு அச்சுப்பிழைகள் ஏற்பட்டுஇருப்பது தெரியவந்தது. சரியான விடைகளைத் தேர்வு செய்து எழுதும் வகையில் 150 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அவற்றில் 21 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. இவற்றுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குமாறு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர்,ஆசிரியர் தேர்வு வாரியச் செயலர் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளேன். விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பிழைகள் உள்ள "பி' வரிசை வினாத்தாளை உபயோகித்தவர்கள் பலருக்கு மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.எனவே, பிழையான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்பு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக