லேபிள்கள்

29.11.15

பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி

மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இடைநிலைத் தேர்வுகள் நடைபெற்றன.

அத்தேர்வுகள் அடிப்படையில், 50 சதவிகித மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் அதிகமாக தோல்விடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
  
இடைநிலைத் தேர்வில் அதிகமானோர் தோல்வியடைந்திருப்பது பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதத்தைப் பாதிக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
   
எனவே, எந்தெந்தப் பாடங்களில் எந்தெந்தப் பள்ளி மாணவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள், அதற்குக் காரணம் என்ன என ஆராய்ந்துள்ளனர். அதில், வகுப்புகளுக்கு சரியாக வராதவர்களும், பாடங்கள் நடத்தப்படும்போது புரியாமல் இருந்தவர்களுமே அதிகம் தோல்வியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கு சிறப்புக் கற்பித்தல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   பயிற்சியின்போது, தோல்வியடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிக்கும் முறையும் விளக்கப்பட உள்ளது.
   
இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் இருக்கவேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  
அதன்படி, இடைநிலைத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்குள்ள பிரச்னைகள் ஆராயப்பட்டு, அதைத் தீர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக