லேபிள்கள்

31.7.16

புதிய கல்விக்கொள்கையில் மிகப்பெரும் ஆபத்துகள் உள்ளன சென்னையில் கூடிய கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கருத்தரங்கம் எச்சரிக்கை

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் புதிய கல்விக் கொள்கை 2016 சாவல்களை விளக்கி மாநில அளவிலான
கருத்தரங் கம் சனிக்கிழமையன்று (ஜூலை 30) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை தாங்கினார். நிதிக் காப்பாளர் ச.மோசஸ் வரவேற்றார். லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிய சாமி சேவியர் துவக்கி வைத்தார்.

கல்வியில் வகுப்புவாத சாவல்கள் என்ற தலைப்பில் பேரா.அருணன் பேசுகையில்,“ கல்விப் பரவலைத் தடுப்பது, ஆன்மிக கல்வி முறை கொண்டு வருவது, அவர்களுக்கு ஏற்றவாறு கல்வி முறையை மாற்றிக் கொள்ளுவது உள்ளிட்ட பெரும் ஆபத்துகள் புதியக் கல்விக் கொள்கையில் உள்ளது.
மேலும், அருகாமைப் பள்ளி என்ற முறை கைவிடப்படும். கலாச்சார ஒருமைப்பாடு என்ற போர்வையில் பிற மொழிகளைத் திணிக்க முயல்கின்றனர்” என்றார்.

பள்ளிக் கல்வி சந்திக்கும் சாவல்கள்என்ற தலைப்பில் பேரா.ஆர்.இராமானுஜம் பேசுகையில்,“ உலகமயக் கொள்கை கடந்த 25 ஆண்டுகாலமாக பொதுக் கல்வி முறையை அழித்து விட்டது. மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை மாணவர்களையும் ஆசிரியர்களையும் குற்றவாளிகளாக மாற்றுவது கண்டிக்கதக்கது” என்றார்.

உயர் கல்வி சந்திக்கும் சவால்கள்என்ற தலைப்பில்பேரா. ஜேம்ஸ்வில்லியம்ஸ் பேசியபோது,“ 12 ஆம் வகுப்பு முடித்துவரும் மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு வைத்து, அந்த மதிப் பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு உயர்கல்வி வழங்குவது மக்களின் கல்விக் கொள்கை அல்ல, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விக் கொள்கை” என்றார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலார் பேட்ரிக் ரெய்மாண்ட் உட்பட கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பில் 23 அமைப்புகளைச் சேர்ந்தநிர்வாகிகள்,மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரா.மணி எழுதிய புதிய கல்விக் கொள்கை: ஆசிரியரும் மாணவரும் குற்றவாளிக்கூண்டிலா என்ற புத்தகமும், விழுது என்ற கருத்தரங்க சிறப்பிதழும் வெளியிடப்பட்டன.ஏசு சபையின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஸ்டீபன், அருட்தந்தை ஜான்.கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ. மாரியப்பன் நன்றி கூறினார். 

இக் கருத்தரங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் பின் வருமாறு:
>மத்திய அரசு உருவாக்கியுள்ள `புதியகல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான சில உள்ளீடுகள்’ என்ற ஆவணத்தை, தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும். அதன் மீது கருத்துக் கூறுவதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும். 
>புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையைத் தயாரிக்க அனைத்து மாநிலங்களிலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் கருத்துக்களையும் பிரதிபலிக்கக் கூடியதாக புதியவரைவுக் குழு உருவாக்க வேண்டும்.
> தமிழக அரசு புதிய கல்விக்கொள்கை மீது கருத்து தெரிவித்திருந்தால் அதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
இல்லையென்றால் அனைத்துத்தரப்பினர் கருத்தையும் கேட்ட பின்பே கருத்தை தெரிவிக்க வேண்டும்.
>குருகுலக் கல்வி மற்றும் சமஸ்கிருதத்தைப் பாட மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று கூறும் ஆர்எஸ்எஸின் துணை அமைப்புகள் நடத்திய கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்சென்று 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியதை கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

>ஆகஸ்டு 13,14 ஆகிய தேதிகளில் மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தி கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாவட்டம் தோறும் கல்வி உரிமைபாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் மணி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக