ஆசிரியர் தின விருதுக்கு, விதிகளை மீறாமல் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும், கற்பிப்பதில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
குளறுபடி : தமிழகத்தில் இந்த விருது வழங்குவதில், சில ஆண்டுகளாக குளறுபடிகள் ஏற்பட்டன. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில், தேர்வுக்குழுவில் இடம் பெற்ற அதிகாரிகளுக்கே, விருது வழங்கியதாக, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
உத்தரவு : இந்நிலையில், இந்த ஆண்டு விருதுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. மாவட்ட அளவில், ஆசிரியர்களின் விண்ணப்பங்களை, கல்வி அதிகாரிகள் சேகரித்துள்ளனர். வரும், 10க்குள் விண்ணப்பங்களை பரிசீலித்து, மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பணம் வாங்கி கொண்டு, 'டியூஷன்' நடத்துவோர், ஓ.பி., அடித்து நேரத்தை போக்குவோர் போன்றவர்களை தவிர்த்து, முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்ய, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தகுதியில்லாத ஆசிரியர்களை விதிகளுக்கு முரணாக தேர்வு செய்தால், அதற்கு, கமிட்டியில் இடம் பெற்ற அதிகாரிகள் தான் பொறுப்பு என்றும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில், விருது பெறுவதற்காக ஆசிரியர்கள் பலர், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், அமைச்சர்களுக்கு வேண்டியவர்களை சந்தித்து, சிபாரிசுக்கு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தகுதியற்ற ஆசிரியர்களுக்கு சிபாரிசு அடிப்படையில் விருது வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், திறமையான ஆசிரியர்கள் பெறும் விருதுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். 100 சதவீத தேர்ச்சி, பள்ளி மாணவர்கள், கல்வித்துறையின் பொதுநலனுக்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு விருது வழங்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக