தில்லி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கெளரவ ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ஏறத்தாழ இரு மடங்கு வரை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் தில்லி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமுடிவுகள் குறித்து முதல்வர் கேஜரிவால் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் கெளரவ ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தற்போது வரை கெளரவ ஆசிரியர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அவர்கள் விடுப்பு எடுக்கும் நாளில் ஊதியம் பெறாத நிலை இருந்து வந்தது. இனி கெளரவ ஆசிரியர்களின் ஊதியம் மாதவாரியாக கணக்கிட்டு வழங்கப்படும். இதன்படி, மாதம் சுமார் ரூ.17,500 வரை ஊதியம் பெற்று வந்த கௌரவ ஆசிரியர், மாற்றியமைக்கப்பட்ட ஊதிய நிர்ணயத்தின்படி இனி மாதம் சுமார் ரூ.32,200 முதல் ரூ.34,100 வரை பெறுவர். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) முடித்தவர்கள், தேர்வு முடிக்காதவர்கள் என இரு வகைகளாக இருக்கும் கௌரவ ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர், டிஜிடி (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்), பிஜிடி (முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்), சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தும். மாற்றியமைக்கப்பட்ட சிடிஇடி ஆசிரியர்களின் புதிய மாத ஊதிய விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் தினப்படி, பழைய மாத ஊதியம்): உதவி ஆசிரியர் - ரூ.32,200 (ரூ.700, ரூ.17,500); டிஜிடி ஆசிரியர் - ரூ.33,120 (ரூ.800,ரூ.20,000); பிஜிடி ஆசிரியர் - ரூ.34,100 (ரூ.900, ரூ.22,500); சிறப்புக் கல்வி ஆசிரியர் - ரூ.33,120 (ரூ.800, ரூ.22,000). சிடிஇடி தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் புதிய ஊதிய விவரம் வருமாறு: உதவி ஆசிரியர் - ரூ.25,000 (ரூ.700, ரூ.17,500); டிஜிடி ஆசிரியர் - ரூ.26,250 (ரூ.800, ரூ.20,000); பிற ஆசிரியர்கள் (ஓவியம், உடற்பயிற்சி, நூலகர்) - ரூ.26,250 (ரூ.800, ரூ.20,000). இதுவரை கெளரவ ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையை மாற்றப்பட்டு இப்போது ஆண்டுக்கு எட்டு நாள்கள் தற்செயல் விடுப்பு (கேஷ்வல் லீவ்) அளிக்கப்படவுள்ளது. மத்திய அரசு 2011-ஆம் ஆண்டில் கொண்டு வந்த அனைவருக்கும் கல்விச் சட்டத்தில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் "சிடிஇடிட தேர்வை எழுதி தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த ஜூலையுடன் நிறைவடைந்து விட்டது. இவ்வாறு "சிடிஇடி' தேர்வை எழுதாமல் இரண்டாயிரம் கெளரவ ஆசிரியர்கள் தில்லியில் உள்ளனர். சட்டப்படி இதுபோன்ற ஆசிரியர்களைப் பணியில் இருந்து நீக்க வேண்டும். ஆனால், இந்த கௌரவ ஆசிரியர்கள், "சிடிஇடி' தேர்வை எழுத இரு வாய்ப்புகளை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இரு வாய்ப்புகளுக்குள் "சிடிஇடி' தேர்வில் வெற்றி பெறாவிட்டால், அவர்களை பணியில் இருந்து விலக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்றார் கேஜரிவால். பேட்டியின் போது துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா உடனிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக