லேபிள்கள்

14.2.18

'நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக, அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 
கட்சிகளால் குழப்பம் : நடப்பாண்டு, 2017 - 18 வரை, நீட் தேர்வு குறித்து, அரசியல் கட்சிகள், மாணவர்களை குழப்பி விட்டதால், பெரும்பாலான மாணவர்கள், நீட் தேர்வை எழுத முடியவில்லை. இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயம் என்பது, எந்த குழப்பமும் இன்றி, துவக்கத்திலேயே உறுதியாகி விட்டது. அதனால், தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், நீட் நுழைவு தேர்வு எழுத உள்ளனர். அவற்றில், அரசு பள்ளிகளில் படிக்கும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அரசின் சார்பில், நீட் நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.நீட் தேர்வு, மே, 6ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 9ல் துவங்கியது. தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கும், விண்ணப்ப பதிவுகளை செய்து தருகின்றன. ஆனால், நீட் தேர்வு குறித்த அறிக்கை மற்றும் தகவல் கையேடு ஆங்கிலத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களால், அவற்றை முழுவதுமாக படித்து, வழிகாட்டுதல் பெற முடியாத நிலை உள்ளது.
கிராமப்புற மாணவர்கள் : சென்னை போன்ற மாநகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரையுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதிகள் இன்றி தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு தலையிட்டு, பள்ளிக்கல்வித் துறை அல்லது சுகாதாரத் துறை சார்பில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இலவச ஆன்லைன் வசதி செய்து தரவேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக