பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான சட்டத் திருத்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின்படி, அந்த மசோதா மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது
. பாஜக எம்.பி. சத்தியநாராயணன் ஜாட்டியா தலைமையிலான அக்குழு கடந்த சில மாதங்களை அதனை ஆய்வு செய்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தனது ஆய்வறிக்கையை அக்குழு சமர்ப்பித்துள்ளது.
அதுதொடர்பான விவரங்கள் மாநிலங்களவைச் செயலர் அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை வெளியாகியுள்ளன
.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்று 6 மாநிலங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளன.
மீதமுள்ள மாநிலங்கள் அனைத்தும் அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது கட்டாயத் தேர்ச்சி முறையை மாற்றியமைப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆண்டுதோறும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி அவர்களது திறனை மதிப்பிடுவது அவசியம்.
அதில் தோல்வியடைபவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கலாம். அதன் மூலம் அவர்கள் கல்வியறிவு செழுமையடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக