லேபிள்கள்

11.6.18

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், 12 சதவீதம், 'பாஸ்' 51வது இடம் பிடித்தார் தமிழக மாணவர்

ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஹரியானா மாணவர், தேசிய அளவில் முதலிடம் பெற்றார். சென்னை தனியார் பள்ளி மாணவர், தேசிய அளவில், 51ம் இடம் பிடித்தார்.

ஐ.ஐ.டி., மற்றும், என்.ஐ.டி.,யில், மாணவர்கள் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவு தேர்வு முடிவை, தேர்வை நடத்திய, கான்பூர் ஐ.ஐ.டி., நேற்று வெளியிட்டது. இதில், மொத்தம், 360 மதிப்பெண்களுக்கு, 337 மதிப்பெண் பெற்று, ஹரியானா மாணவர், பிரணவ் கோயல், தேசிய, 'ரேங்க்' பட்டியலில் முதலிடம் பெற்றார். இவர், ஐ.ஐ.டி., ரூர்க்கி மண்டலத்தில், பதிவு செய்து தேர்வு எழுதியவர்.தமிழகத்தில், சென்னை மண்டலத்தில், சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவு செய்த, விஜயவாடாவைச் சேர்ந்த மாணவர், மவுரிசிவ கிருஷ்ண மனோகர், அகில இந்திய அளவில், ஆறாம் இடம் பெற்றுள்ளார்.

சென்னையில், 'பிட்ஜீ' பயிற்சி மைய மாணவர், கிரிநாத், 285 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், 51ம் இடம் பிடித்துள்ளார். இவர், சென்னை மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் படித்து, பயிற்சி மையத்தில், நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர். அதேபோல, பல மாணவர்கள், பிட்ஜீ மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த விழாவில், பாராட்டும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

தேசிய அளவில், 23 ஐ.ஐ.டி.,க்களில், 11 ஆயிரத்து, 279 இடங்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது. இதில், 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,076 மாணவியர் உட்பட, 18 ஆயிரத்து, 138 பேர், ஐ.ஐ.டி.,யில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில், 8,794 பேர்; பிற்படுத்தப்பட்ட பிரிவில், 3,140; தலித் மாணவர்களில், 4,709 மற்றும் பழங்குடியினர் பிரிவில், 1,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐ.ஐ.டி.,க்களில், மாணவியரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, இந்த ஆண்டு முதல், மாணவியருக்கு தனி இட ஒதுக்கீடு அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி, 800 இடங்கள் மாணவியருக்கு மட்டும், தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக