லேபிள்கள்

1.7.18

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியீடு

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவ படிப்பு தரவரிசை
பட்டியல் கடந்த மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மருத்துவ படிப்பு கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி (இன்று) தொடங்கும் என்று தெரிவித்தார். அதன்படி, கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இதுதொடர்பான கால அட்டவணை மருத்துவ தேர்வுக்குழு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு - சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், விளையாட்டு வீரர்கள் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

2-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 1 முதல் 100 வரையிலும், 11 மணிக்கு 101 முதல் 356 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 357 முதல் 597 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

3-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 598 முதல் 848 வரையிலும், 11 மணிக்கு 849 முதல் 1103 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 1104 முதல் 1417 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

4-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 1418 முதல் 1667 வரையிலும், 11 மணிக்கு 1668 முதல் 1872 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 1873 முதல் 2380 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

5-ந்தேதி(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 2381 முதல் 2738 வரையிலும், 11 மணிக்கு 2739 முதல் 3164 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 3165 முதல் 4312 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 4313 முதல் 4905 வரையிலும், 11 மணிக்கு 4906 முதல் 5203 வரையிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு, பிற்பகல் 2 மணிக்கு சாதி தரவரிசை 241 முதல் 389 வரை இடம்பிடித்த தாழ்த்தப்பட்ட முஸ்லீம் பிரிவு மாணவர்களுக்கும், 3 மணிக்கு சாதி தரவரிசை 961 முதல் 1128 வரை இடம்பிடித்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சாதி தரவரிசை 1129 முதல் 1389 வரையில் இடம்பிடித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், 11 மணிக்கு சாதி தரவரிசை 263 முதல் 566 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 567 முதல் 867 வரையில் இடம்பிடித்த எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கும், 3 மணிக்கு சாதி தரவரிசை 26 முதல் 184 வரையில் இடம்பிடித்த எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கும், 4 மணிக்கு சாதி தரவரிசை 5 முதல் 96 வரையில் இடம்பிடித்த எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு சில அறிவுரைகள், நிபந்தனைகளை மருத்துவ தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்துக்கு சென்று கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பிரத்தியேகமாக அழைப்பு கடிதம் யாருக்கும் அனுப்பவில்லை.

* கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு மாணவர்கள் கலந்தாய்வு அறையில் இருக்க வேண்டும்.

* கலந்தாய்வுக்கு வரும்போது, மாணவர்கள் அதற்கான கட்டணமான ரூ.500-ஐ ‘ secretary, selection committee, chennai100 ’ என்ற முகவரிக்கு டி.டி.யாக எடுத்து வரவேண்டும்.

* கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் நீட் ஹால்டிக்கெட், நீட் மதிப்பெண் அட்டை, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆளறி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து இருந்தால் இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

* தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து இருந்தால், அந்த மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க எஸ்.எஸ்.எல்.சி, 12-ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, தொழிற்சார்ந்த படிப்புகள் தொடர்பான சான்றிதழ்களில் ஏதாவது ஒன்றும், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வருமான சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.

* கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்கள் அனைவருக்கு ஒதுக்கீடு கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. கலந்தாய்வு அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை நன்றாக வாசிக்க வேண்டும்.

* அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும், கலந்தாய்வு குறிப்பிடப்பட்டு இருக்கும் நேரத்தில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

* அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காவிட்டால், அடுத்து வரும் கலந்தாய்வில் அனுமதிக்க இயலாது.

* கலந்தாய்வு நடைபெறும் அறைக்கு செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருடன் அவருடைய பெற்றோரில் ஒருவர் மட்டுமே கூட செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக