லேபிள்கள்

5.7.18

பள்ளிகளில் 'நீட்' தேர்வு பயிற்சி; தமிழக அரசு தடை

தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் வழியாக 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவு சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:

● தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் சட்டத்தில் உள்ள விதிகளை பல பள்ளிகள் மீறுவது தெரிய வந்துள்ளது. சட்ட விதிகளின்படி தனியார் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் சேவை அடிப்படையில் மட்டுமே கல்வி நிறுவனத்தை நடத்த வேண்டும். லாப நோக்கில் நடத்த அனுமதி இல்லை.

● தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகார ஒழுங்குமுறை சட்டம் 1974ன் படி,பள்ளி வளாகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பாடத்தில் வகுப்பு நடத்தவும், முதன்மை கல்வி அதிகாரி அனுமதிக்கும் தேர்வுகளை நடத்தவும் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஆசிரியர் கல்வித்தகுதி :

● இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பிரிவு - 23 ஒன்றாவது உட்பிரிவின்படி, பள்ளி வளாகத்தில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில் கல்வித்தகுதி நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த கல்வித்தகுதி இல்லாதவர்களை பயிற்சி வகுப்பு நடத்த ஈடுபடுத்தினால் அது விதி மீறிய செயல்.

● தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகார ஒழுங்குமுறை சட்டம் 1973ல் பிரிவு - 3ன்படி,அங்கீகாரம் அளித்த படிப்பை தவிர வேறு பாடங்களை பயிற்றுவிப்பது விதிமீறல். மாணவர்களின் விருப்பத்தை மீறி டாக்டர், இன்ஜினியர், ஆடிட்டர் என ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி மட்டும் கற்பித்தல் பணியை ஊக்குவிக்க கூடாது.

இதே சட்டத்தில் விதி - 9 பிரிவு - 2ல் உள்ளவாறு, எந்த ஒரு கல்வி நிறுவனமும் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் கட்டணமோ அல்லது நன்கொடையோ வசூலிக்க கூடாது. பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் போது இந்த நிபந்தனையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

புகார் என்ன?

சில தனியார் பள்ளிகளில்,போட்டி தேர்வுகளை சந்திக்கசிறப்பு பயிற்சி தருவதாக வணிக ரீதியிலான தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி வேலை நேரங்களில்கற்பித்தல் பணிகள் நடத்தப்படுகின்றன.

இந்த செயல் பள்ளி வளாகத்தில் வணிக ரீதியிலான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன், அரசு அங்கீகரித்த பாடத்திட்டத்தில் பாடம் நடத்துவதையும் சீர்குலைக்கிறது. சில பள்ளிகளில் நுழைவு தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி தருவதாக கூறி ஆறாம் வகுப்பு முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஆசிரியர் பணிக்கு தேசிய கல்வி கவுன்சில் விதிக்கும் கல்வித்தகுதி இல்லாதவர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு பாட சுமை, மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ள நிலையில், வணிக ரீதியில் தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த பயிற்சி,பள்ளிகள் இடையே லாபநோக்கத்திலான ஆரோக்கியமற்ற போட்டியை ஏற்படுத்திஉள்ளது.

வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை பள்ளிகள் வசூலிக்கும் தகவல் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பள்ளிகளில் பாடம் நடத்துவது, பயிற்சி அளிப்பது, தேர்வுக்கான வழிமுறைகளை விளக்குவது போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

'நீட்' பயிற்சிக்கு தடை :

● இதன்படி தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். பள்ளி வேலை நாட்களில், பள்ளி வளாகத்தில் தனியார் நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள் வழியாக வணிக நோக்கில் சிறப்பு பயிற்சி அளிக்க கூடாது.

● பள்ளியில் எந்த மாணவரையும், 'சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர வேண்டும்' என கட்டாயப்படுத்த கூடாது. தனியார் பள்ளிகளுக்கான சுயநிதி கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்ததை விட அதிகமாக வசூலிக்க கூடாது. சிறப்பு பயிற்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது

● எந்த பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதோ அந்த அனுமதியின் படி பிளஸ் 1, பிளஸ் 2வில் அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பாடங்களை நடத்த வேண்டும்

● இந்த உத்தரவுகளை மீறும் பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து செய்வது உட்பட நடவடிக்கை எடுக்கப்படும். முதன்மை கல்வி அதிகாரிகள்ஆய்வு செய்து, விதிமீறுவோரை கண்டறிய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.அரசின் பயிற்சி நடக்குமா?
தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கான பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சி விதியை மீறுவதாக இருக்காதா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அரசின் 'நீட்' தேர்வு பயிற்சி தொடர்ந்து நடத்தப்படும். அரசு மற்றும் உதவி பள்ளிகளில் பள்ளி வேலை நேரங்களில் தனியார் நிறுவனங்களின் 'நீட்' தேர்வு பயிற்சியை நடத்தவில்லை; விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்பட்டது. மாணவர்கள் அவர்களாகவே பதிவு செய்து தங்கள் விருப்பத்தின்படி வந்தவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. மாறாக பள்ளிகளில் ஒரு பாடப்பிரிவில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி வேலை நேரங்களில் 'நீட்' பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் எந்த மாணவரிடமும் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. எனவே சட்டத்திற்கு உட்பட்டு இந்த பயிற்சி தொடரும். இவ்வாறு கூறினர்.

சி.பி.எஸ்.இ.,க்கும் பொருந்தும் :
பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் கூறியதாவது: சில பள்ளிகளில் 'நீட், ஜே.இ.இ.,' பயிற்சி என்ற பெயரில் பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான இலக்கை நோக்கி படிப்பதில்லை. அனைவரும் நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேர வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டம் அல்லாமல் தமிழகத்தில் இயங்கும் சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட மற்ற பாடத்திட்ட பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அந்த பள்ளிகளும் பாடத்திட்டத்தை தவிர்த்து பள்ளி வேலை நேரங்களில் தனியார் நிறுவனங்களின் போட்டி தேர்வு பயிற்சி அளிக்க கூடாது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகார சட்ட விதிகள் இந்த பள்ளிகளுக்கும் பொருந்தும்; அவர்களுக்கு தனியாக எந்த சலுகையும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக