முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது. மதுரை, புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமனத் தேர்வில், "பி" வகை வினாத்தாளில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன.
அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டார்.
திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார். அக்., 1ல், நீதிபதி
நாகமுத்து உத்தரவில், "தேர்வு எழுதியவர்களுக்கு, டி.ஆர்.பி., அநீதி இழைத்துள்ளது. ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை, 21ல் நடந்த தமிழாசிரியர்கள் நியமனத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. டி.ஆர்.பி., ஆறு வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும்" என்றார். இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், "பிழையான வினாக்கள் இடம் பெற்றதாக, இருவர் மட்டுமே மனு செய்துள்ளனர்.
அச்சுப் பிழையால் வினாக்கள், விடைகளில் பொருள் மாறவில்லை. மறுதேர்வு நடத்தினால் காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். நீதிபதிகள், ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன், "பெஞ்ச்" முன், மனு விசாரணைக்கு வந்தது.
"தேர்வு
முடிவை, டி.ஆர்.பி., வெளியிடலாம். விஜயலட்சுமி,
அந்தோணி கிளாராவிற்கு, தலா, 21 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவர்களுக்காக, இரு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். டி.ஆர்.பி., செயலர், டிச., 20ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக