லேபிள்கள்

23.1.15

பிளஸ்-2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன : அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள்அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
பிளஸ்-2 தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 5-ந்தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் மாதம் 31-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 2 ஆயிரத்து 100 மையங்கள்அமைக்கப்பட உள்ளன.தேர்வுக்கான ஏற்பாடு குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறியதாவது:-பிளஸ்-2 தேர்வை நல்ல முறையில் நடத்தி அதன் முடிவுகளை அறிவிக்கவேண்டும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

விடைத்தாள்கள் அனுப்பப்பட்டன

மாணவர்கள் விடை எழுதக்கூடிய விடைத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன. மாணவர்களின் பதிவெண், மாணவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விடைத்தாளின் முதல் பக்கம் மட்டும் தனியாக 10 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. மீதம் உள்ள மாவட்டங்களுக்கு விரைவில் அனுப்பப்பட்டு விடும். அவ்வாறு நாங்கள் அனுப்பப்படும் முதல்பக்க தாளை விடைத்தாளுடன் வைத்து தைக்கப்படும் பணியை ஆசிரியர்கள் அந்தந்த தேர்வுமையத்தில் செய்து வருகிறார்கள்.தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு இருக்காது

இதுவரை அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் இருந்துதான் வினாத்தாள் வரும். ஆனால் இந்த வருடம் தேர்வு மையத்திற்கு அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள். சரியான நேரத்தில் தேர்வுகள் தொடங்கும்.உதாரணமாக நெல்லை மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்கு அருகில் உள்ளது கன்னியாகுமரி மாவட்டமாக இருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக