லேபிள்கள்

18.1.15

அரையாண்டு தேர்வில் தவறிய மாணவர்கள் காலை 8 மணிக்கே பள்ளிக்கு வர உத்தரவு

அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை, 8:00 மணி முதல் சிறப்பு வகுப்பு நடத்தி, பயிற்சியளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்குடன் பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளும், தமிழக அளவில், ஒரே மாதிரியான வினாத்தாளில் அமைவதால், அதன் தேர்ச்சி விகிதம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதில், தற்போது நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில், பிளஸ் 2 மாணவ, மாணவியரில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட தேர்ச்சி இருந்தாலும், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் எதிர்பார்த்தமைக்கும் குறைவாகவே இருந்தது. எட்டாம் வகுப்பு வரை, ஆல் பாஸ் என்பதால், 10ம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சியை கொண்டு வருவது, அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 65 சதவீத அளவுக்கே இருக்கும் என்பதால், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சியளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத மாணவர்களை பொதுத்தேர்வில், வெற்றி பெறச்செய்வதே நம் நோக்கம். 10ம் வகுப்பு மாணவர்களை காலை, 8:00 மணிக்கே, பள்ளிக்கு வரவழைத்து, குறிப்பிட்ட ஆசிரியர்களை கொண்டு, அமைதியாக படிக்கச்செய்ய வேண்டும். திறமையான மாணவர் தலைமையில், நடுநிலை, கடைநிலை மாணவரும் இடம்பெறும் வகையில், குழு பிரித்து, அந்த குழுவுக்கு தினமும் படிக்க வேண்டிய பகுதிகளை பாட ஆசிரியர் பிரித்து தர வேண்டும். சிறுவினா, குறுவினா, பெருவினா, மனப்பாட பகுதிகளை ஒப்புவித்து, பின் எழுதிக்காட்ட செய்து, ஆசிரியர் திருத்த வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும், பள்ளி வளாகத்தில் மாலை, 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது. உரிய நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக