லேபிள்கள்

7.9.15

அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் 2 மடங்கு மாணவர்கள்!

மாணவர்களின் சராசரி எண்ணிக்கை, அரசு தொடக்கப் பள்ளிகளைவிட தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

 தமிழகத்தில் மொத்தமுள்ள 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 14 லட்சத்து 88 ஆயிரத்து 235 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான சராசரி மாணவர்களின் எண்ணிக்கை 61.88 ஆகும்.
 அதேநேரத்தில், மொத்தமுள்ள 6,202 நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 279 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில், ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 123.39 ஆகும்.
 உயர்நிலைப் பள்ளிகளிலும் அதிக வித்தியாசம்: தமிழகம் முழுவதும் உள்ள 3,046 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 631 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி 214.58 ஆக உள்ளது. 1,955 தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 835 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளியில் சராசரியாக 430 மாணவர்கள் படிக்கின்றனர்.
 மேல்நிலைப் பள்ளிகளில் வித்தியாசம் குறைவு: இந்தப் புள்ளி விவரங்களின்படி, அரசு நடுநிலைப் பள்ளிகளில் சராசரி மாணவர் எண்ணிக்கை 172.8 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 759.89 ஆகவும் உள்ளது.
 தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சராசரி மாணவர் எண்ணிக்கை 198.64 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 1082.16 ஆகவும் உள்ளது.
 பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படைக் கல்வி புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 1.31 கோடி மாணவர்கள்: இந்தப் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 57,208 பள்ளிகளில் 1 கோடியே 31 லட்சத்து 93 ஆயிரத்து 950 மாணவர்கள் படிக்கின்றனர். 
 இந்தப் பள்ளிகளில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 743 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
 37,141 அரசுப் பள்ளிகளில் 
 55 லட்சத்து 40 ஆயிரத்து 425 மாணவர்கள் படிக்கின்றனர். 8,409 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 29 லட்சத்து 98 ஆயிரத்து 255 மாணவர்களும், 11,658 தனியார் பள்ளிகளில் 46 லட்சத்து 55 ஆயிரத்து 270 மாணவர்களும் படிக்கின்றனர்.
 அரசு உதவி பெறும் பள்ளிகள்: அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைப் பொருத்த வரை 5,059 பள்ளிகளுக்கு 6 லட்சத்து 69 ஆயிரத்து 691 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 132.37 ஆக உள்ளது. 
 நடுநிலைப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 338.37 ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளில் 398.03 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 1,325.40 ஆகவும் உள்ளது. 
 ஆசிரியர்கள் விகிதமும் குறைவு
 தமிழகத்தில் மொத்தமுள்ள 24,050 அரசு தொடக்கப் பள்ளிகளில் 64,279 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதன்மூலம், ஒரு பள்ளிக்கு சராசரியாக 2 முதல் 3 ஆசிரியர்கள் வரை இருக்கும் நிலையே உள்ளது.
 அதேநேரம், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 9 ஆசிரியர்கள் உள்ளனர். 
 6,202 தனியார் பள்ளிகளில் 57,264 ஆசிரியர்கள் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த, கல்வியாளர்கள் ஒரு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் கோரிக்கையை நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க பள்ளிக் கல்வித் துறை மறுத்து வருகிறது.
 தொடக்கப் பள்ளிகளைப் பொருத்த வரை, ஆசிரியர்- மாணவர் விகிதம் 23:1 என்ற நிலையில் உள்ளது. ஆனால், பள்ளிகள் அளவில் பெரும்பாலான பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே 5 வகுப்புகளையும் கவனிக்கும் நிலை உள்ளது. 
 நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக 7 ஆசிரியர்கள்: 7,213 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 53,145 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஒரு நடுநிலைப் பள்ளியில் சராசரியாக 7 முதல் 8 ஆசிரியர்கள் வரை பணிபுரிகின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் 11 ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் சராசரியாக 29 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.
 தனியார் மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்த வரை 2,664 பள்ளிகளுக்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 833 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஒரு பள்ளிக்கு சராசரியாக 43 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக 14 ஆசிரியர்களும், தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் சராசரியாக 20 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக