லேபிள்கள்

19.1.15

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கடந்த நவம்பர் 5 முதல் டிசம்பர் 3 வரை நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள், திங்கள்கிழமை பிற்பகல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகின்றன.

இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.அசோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் கடந்த நவம்பர் 5-இல் தொடங்கி டிசம்பர் 3 வரை நடைபெற்றன. விடைத்தாள் மதிப்பீடு 8 மையங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.thiruvalluvaruniversity.ac.in) திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படும்.

இத்தேர்வுப் பணிகள் அனைத்தும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இம்முறை தமிழகத்திலேயே முதன்முறையாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்வுகளை எழுத 1,08,393 இளநிலை மாணவ, மாணவியரும், 11,073 முதுநிலை மாணவ, மாணவியரும் இணையதள வழியாக பதிவு செய்திருந்தனர். இவர்களில் இளநிலை பட்ட வகுப்பில் 7,948 பேரும், முதுநிலை பட்ட வகுப்பில் 801 பேரும் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் இளநிலை பாடப் பிரிவில் 42,790 பேரும் (43 சதவீதம்), முதுநிலை பாடப் பிரிவில் 5,531 பேரும் (54 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் 826 மாணவ, மாணவியர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இளநிலைப் பிரிவில் பி.லிட்., தமிழ் பாடப் பிரிவில் அதிகபட்சமாக 98 சதவீதம் மாணவ, மாணவியரும், முதுநிலையில் வரலாறு பாடப் பிரிவில் 100 சதவீதம் மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் அனைத்தும் அந்தந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியருக்கான மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் பிப்ரவரி 15-க்குள் அனுப்பி வைக்கப்படும்.

மறுமதிப்பீடு: இத்தேர்வில் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அந்தந்தக் கல்லூரி முதல்வர் வழியாக இணையதள மூலம் ஜனவரி 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக