லேபிள்கள்

18.10.15

தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டுமானபணியை விரைவில் முடிக்க வேண்டும் மாணவ–மாணவிகள் கோரிக்கை

திருப்பூர் அவினாசி ரோட்டில் புஷ்பா ரவுண்டானா அருகில் தேவாங்கபுரம் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த
பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டப்பட்டு சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் வேயப்பட்டிருந்த ஓடுகள் உடைந்து விட்டன. மழைகாலங்களில் மழைநீர் உடைந்த ஓடுகள் வழியே பள்ளி வகுப்பறைக்குள் வழிந்து குளம் போல தேங்கி விடுகிறது. இதனால் மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளிக்கட்டிடத்தின் ஓடுகளை மாற்றித்தர வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த ஓடுகள் முழுவதும் அகற்றப்பட்டு அலுமினிய தகடுகள் அமைக்கப்பட்டது. மேலும் பள்ளி சுற்றுச்சுவரை உயரப்படுத்தி நுழைவு வாயில் மற்றும் இரும்பு கதவு அமைக்கவும் முடிவு செய்து பணிகள் தொடங்கப்பட்டது.ஓரிரு மாதங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படுவதற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. பள்ளி திறந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் பணிகள் முடிவடையாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பணிக்கு தேவையான செங்கல், மணல், ஜல்லி ஆகியவை பள்ளி நுழைவாயில் அருகே கொட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால் மாணவ–மாணவிகள் அதன்மீது ஏறி வரவேண்டி உள்ளது. இதனால் சில சமயம் அவர்கள் கீழே விழுந்து விடுகிறார்கள்.இது குறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:– கோடை விடுமுறை நாட்களில் கட்டுமான பணிகளை முடித்து இருந்தால் மாணவர்களுக்கு பிரச்சினை எதுவும் இருந்திருக்காது. பள்ளி நடக்கும் நேரத்தில் கட்டுமான பணி நடைபெறுவதால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. மாணவர்கள் விளையாடும் இடமும் சுத்தப்படுத்தப்படாமல் இருப்பதால் விளையாட முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். ஆகவே விரைவில் கட்டுமான பணிகள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பள்ளி கட்டுமான பணி குறித்து பள்ளி தலைமையாசிரியை ரோஜா வனராணி கூறியதாவது:– பள்ளிக் கூரைகளில் அலுமினிய தகடுகள் அமைத்த கையோடு சுற்றுச்சுவரையும் சற்று உயர்த்தி கட்டிவிட முடிவு செய்தோம். வளைவுடன் கூடிய நுழைவு வாயில் மற்றும் இரும்புகதவு அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. பூச்சு வேலை மட்டுமே பாக்கி உள்ளது. ரோடு மட்டத்தில் இருந்து பள்ளி தாழ்வாக அமைந்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது. ஆகவே பள்ளிகட்டிடத்தின் முன்புறமும் மண் கொட்டப்பட்டு உயர்த்தப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக