ஜவ்வாதுமலையில் உள்ள அரசு பள்ளிகளில், போலி வருகைப்பதிவேடுகளை பராமரித்து வந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர். திடீர் ஆய்வுதி.மலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை, கல்வியில் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இங்குள்ள மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக, அரசு தொடக்கப் பள்ளிகள், 60, மற்றும் ஆதிதிராவிட நலத்துறை சார்பில், 24 உறைவிட நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
உறைவிடப் பள்ளிகளில், 1,909 மாணவர்களும், ஆரம்பப் பள்ளிகளில், 3,465 மாணவர்களும் உள்ளதாக, வருகைப்பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில், 150க்கும் மேற்பட்ட அலுவலர்கள், 84 பள்ளிகளிலும், இரு நாட்களாக திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், வருகைப்பதிவேட்டில் உள்ள புள்ளிவிவரத்திற்கும், வகுப்பில் இருந்த மாணவர்கள் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
ஒரு மாணவரின் பெயர், இரண்டு பள்ளிகளின் பதிவேட்டில் இருந்ததும், இல்லாத மாணவர்களின் பெயர்களை எழுதி வைத்தும், ஆசிரியர்கள் முறைகேடு செய்ததை கண்டு, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 50 சதவீத மாணவர்களின் பெயர் போலியானவை என உறுதி செய்தனர்.
இது குறித்து, பொன்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:ஆட்சியரின் உத்தரவுப்படி, ஒரே நேரத்தில் ஆய்வு நடத்தினாம்; அதில், உறைவிடப் பள்ளிகளில் அதிக முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது. ஒரு பள்ளியில், 96 மாணவர்கள் என்றால், 39 பேர் தான் வருகின்றனர். அவர்களுக்கும், மூன்று வேளையும் உணவு தருவதில்லை. பதவிகளை காப்பாற்ற... வருகைப்பதிவேட்டில் உள்ள சில பெயர்களை, வீடுகளுக்கு சென்று விசாரித்ததில், அந்த பெயரில் யாருமே இல்லை என தெரிய வந்தது.
ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில், அதிகமான மாணவர்கள் உணவு சாப்பிடுவதாக கணக்கு காட்டி, முறைகேடு செய்துள்ளனர். தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள, ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும், போலி வருகைப்பதிவேடு தயாரித்து, அரசை ஏமாற்றி வந்துள்ளனர்; ஆய்வு விவரங்களை அறிக்கையாக, ஆட்சியரிடம் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக