லேபிள்கள்

2.11.15

பள்ளி ஆசிரியரின் ஓய்வூதியம் பிடித்தம்: நடவடிக்கைக்கு இடைக் காலத் தடை

பள்ளி ஆசிரியரின் ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட கருவூலத்துறை அதிகாரியின் நடவடிக்கைக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

 மதுரை அய்யர்பங்களா ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீமான்சுந்தர்சிங் (73). இவர் தாக்கல் செய்த மனு:

 நான் மதுரை மாநகராட்சி பள்ளியில் 1969 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அதன்பின்பு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று 2001 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றேன்.
கடந்த 14 ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இந்நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி மதுரை மாவட்ட கருவூல அதிகாரி எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில், எனக்கு 1,12,028 ரூபாய் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணத்தை திரும்ப செலுத்தும் வகையில் மாதம்தோறும் எனக்கு வழங்கப்பட உள்ள ஓய்வூதிய தொகையில் 11,600 ரூபாய் பிடித்தம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

 ஓய்வு பெற்றவர் ஏதேனும் மோசடியில் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே அவரிடம் இருந்து ஓய்வூதியத்தில் பணத்தை பிடித்தம் செய்ய முடியும். அதுபோன்று, எந்த குற்றச்சாட்டும் என் மீது கிடையாது. ஓய்வூதிய தொகையை முறையாக நிர்ணயம் செய்யாததற்கு ஓய்வூதியம் பெறுபவர் பொறுப்பாக முடியாது. ஓய்வூதிய தொகையில் இருந்து ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பணத்தை பிடித்தம் செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து உரிய விளக்கம் பெற வேண்டும். அதுபோன்று, எந்த விளக்கமும் என்னிடம் பெறவில்லை. எனவே, எனது ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்ற மதுரை மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் கே.சாமித்துரை ஆஜராகி வாதாடினார்.

 மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் ஓய்வூதியத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் என்ற மதுரை மாவட்ட கருவூல அதிகாரியின் நடவடிக்கைக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக கருவூலத் துறை இயக்குநர், மதுரை மாவட்ட கருவூல அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக