லேபிள்கள்

6.2.16

ஆசிரியர் நியமன விவகாரம்: பள்ளிக் கல்வித்துறை மேல்முறையீடு; உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஊதியம் வழங்க உத்தரவு:

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் நியமனத்தை அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை மனுதாரருக்கு உரிய ஊதியம் வழங்க உத்தரவிட்டது.தூத்துக்குடி மேலத்தட்டப்பாறையைச் சேர்ந்த எஸ்.எஸ்தர் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2012-இல் பணியில் சேர்ந்தேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி ஆகாததால் என்னுடைய நியமனத்தை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அங்கீகரிக்கவில்லை. எனவே அவருடைய உத்தரவை ரத்து செய்து தொடர்ந்து பணி செய்யவும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனு செய்திருந்தார்.
 இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரை பணியில் அமர்த்த தாற்காலிகமாக அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுபான்மையினர் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என எதுவாக இருந்தாலும் தகுதி உடைய ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முறை. மேலும், தகுதித் தேர்வு முறையானது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், மாநில அரசுகள் குறுக்கீடு செய்ய முடியாது. சிறுபான்மையினர் பள்ளி என்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனும் மனுதாரரின் வாதம் முறையானதல்ல. கல்வித் தகுதியில் வேறுபாடு காண முடியாது எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, எஸ்.மணிக்குமார் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. இதுதொடர்பான இறுதி உத்தரவு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து வழங்கப்படும். மேலும் மனுதாரரும் தற்போது பணியில் உள்ள காரணத்தினால் அவருக்கு உரிய ஊதியத்தை வழங்க உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக