லேபிள்கள்

7.2.16

அடுத்த மாதம் மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ரெயில்வே, அஞ்சல் சேவை முடங்கும் ஆபத்து

மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கி, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ரெயில்வே, அஞ்சல் உள்ளிட்ட சேவைகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய ரெயில்வே ஊழியர் சம்மேளனத்தின் (ஏஐஆர்எப்) பொதுச்செயலாளர் சிவ கோபால் மிஷ்ரா, ஐதராபாத் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு, மத்திய அரசு எந்த முன்னுரிமையும் வழங்கவில்லை.
7-வது சம்பள கமிஷனின் பிற்போக்கான சிபாரிசுகளை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உற்பத்தி அடிப்படையிலான போனஸ் நிலுவை தொகை வழங்கப்படவில்லை. ரெயில்வேயில் 2½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை இல்லை. அயல்பணிகளை பெறுவதை நிறுத்தவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான தொழிலாளர் சட்ட திருத்தங்களை நிறுத்த வேண்டும். அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் நிறுத்த வேண்டும்.
இதில், பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்காரணமாக அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போகிறோம். இதில் ரெயில்வே, அஞ்சல், ராணுவம் உள்ளிட்டவற்றில் பணியாற்றுகிற 36 லட்சத்துக்கும் மேலான ஊழியர்கள் பங்கு பெறுவார்கள்.
ரெயில்வே, அஞ்சல், பாதுகாப்பு, கணக்கு தணிக்கை, வருமான வரி மற்றும் பிற மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான தேசிய நடவடிக்கை குழு, 7-வது சம்பள கமிஷனின் பிற்போக்கான சிபாரிசுகளை நிராகரித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் பிப்ரவரி முதல் வாரத்துக்குள் உடன்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் மார்ச் முதல் வாரத்தில் எந்தவொரு நாளிலும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ரெயில்வே, அஞ்சல் உள்ளிட்ட முக்கிய சேவைகள் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக