லேபிள்கள்

2.4.16

பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: இயற்பியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இயற்பியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 


பிளஸ்-2 தேர்வு

தமிழகத்தில் கடந்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ-மாணவிகள் எழுதினர். நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வின் இறுதித் தாளான இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுதி விட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இதில் இருந்தே வினாத்தாள் எளிதாக இருந்ததை ஓரளவு கணிக்க முடிந்தது.

தேர்வு எளிது

தேர்வு குறித்து எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் கூறியதாவது:-

இயற்பியல் தேர்வின் வினாத்தாள் எளிதாகவே கேட்கப்பட்டிருந்தது. அனைத்து கேள்விகளும் புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்பட்டிருந்தது. சில சமயம் புத்தகத்தில் இல்லாததை சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்கப்படுவதை போல கேட்டு விடுவார்களோ? என்ற ஒரு வித பயம் எங்களுக்கு இருந்தது. ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.

இதனால் வினாத்தாளை நாங்கள் பார்த்ததுமே மகிழ்ச்சி அடைந்தோம். இருப்பினும் ஒரு மதிப்பெண் கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. மேலும், 3 மார்க் கேள்விகளில் சில மறைமுகமாக கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்விகளை ஒரு முறைக்கு சில முறை படித்து பார்த்தால் விடை எழுதி இருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 மார்க் கேள்விகள்

தேர்வில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்த விதம் குறித்து மயிலாப்பூரில் உள்ள ரோசரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியை சுதா செரியன் கூறியதாவது:-

தேர்வை பொறுத்தவரை 1 மார்க் கேள்விகள் சிலவற்றை தவிர்த்து மற்ற அனைத்து கேள்விகளும் எளிதாகவே கேட்கப்பட்டிருந்தன. எங்களுடைய மாணவிகள் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சராசரியாக படிக்கும் மாணவர்கள் கூட இந்த தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெறலாம்.

நுழைவுத்தேர்வு

மாணவ-மாணவிகள் விடுமுறை நாளை பயனுள்ளதாக கழிக்க வேண்டும். இப்போதிருந்தே அடுத்து என்ன படிக்கலாம்? எவ்வாறு நாம் தயார் செய்யலாம் என்று மாணவர்கள் சிந்திக்க தொடங்க வேண்டும். மாணவ-மாணவிகள் நுழைவுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் சிறந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், பொருளியல் தேர்வை எழுதிவிட்டு வந்த மாணவர்களும் கேள்வி மிக எளிதாக கேட்கப்பட்டிருந்ததாக கூறினர். எனவே இந்த தேர்வில் நிறைய மதிப்பெண்களை எதிர்பார்ப்பதாக மாணவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் (மே) முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக