லேபிள்கள்

1.4.16

இன்ஜினியரிங் விண்ணப்பத்துக்கு டி.டி., தேவையா? அண்ணா பல்கலை திட்டத்தை மாற்ற கோரிக்கை.

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்துக்கு, டி.டி., எடுக்க வேண்டும் என்பதால், மாணவர்களின் பணம், 1.5 கோடி ரூபாய் வீணாகும் என, பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே, நேரடியாக வங்கியில் கட்டண தொகையை செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.'அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துஉள்ளது.

ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சிறப்பு பிரிவு மாணவர்கள், 250 ரூபாய்; மற்ற மாணவர்கள், 500 ரூபாய்க்கு விண்ணப்ப கட்டணமாக, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் பெயரில், டி.டி., எடுத்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்கள் விண்ணப்பத்தை நேரில் பெற அலைய வேண்டாம் என்பதற்காகவும், விண்ணப்பத்தை வினியோகிக்க ஊழியர் பற்றாக்குறையாக உள்ளதாலும், 'ஆன்லைன்' முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், டி.டி.,யை அனுப்பும் போது, தபாலிலோ, பல்கலையின் மாணவர் சேர்க்கை பிரிவிலோ, வங்கிகளில் கையாளும் போதோ, தொலைந்து போக வாய்ப்புள்ளது. மேலும், ஒரு டி.டி.,க்கு, 50 ரூபாய் என, மூன்று லட்சம் விண்ணப்பங்களுக்கு, 1.5 கோடி ரூபாய்செலவாகும்.



'ரசீதின் நகலை மட்டும் அனுப்பலாம்'
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:தொழில் நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும், அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் பிரிவு தான் மாணவர்சேர்க்கையை நடத்துகிறது. அந்த துறை, 'ஆன்லைன்' திட்டத்தை இன்னும் நவீனப்படுத்தி இருக்கலாம். அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும், டி.என்.பி.எஸ்.சி.,யில் எப்போதோ, 'ஆன்லைன்' விண்ணப்பம் மற்றும் கட்டண முறை அறிமுகமாகி விட்டது.அந்த தொழில்நுட்பம் அண்ணா பல்கலைக்கு தெரியா விட்டால், சென்னை பல்கலையின் திட்டத்தை பயன்படுத்தலாம். 


அனைத்து இடங்களிலும் கிளைகளை உடைய, ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகளில் கணக்கு துவங்கி, அந்த கணக்கில், மாணவர்கள் நேரடியாக கட்டணம் செலுத்தி, அந்த ரசீதின் நகலை மட்டும் அனுப்பலாம்.இதன் மூலம், ரசீது தொலைந்தாலும், வங்கி கணக்கில் அந்த மாணவரின் கட்டணத்தை ஆய்வு செய்யலாம். இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வந்து, மாணவர்களின் பணம் வீணாவதை தடுக்கவும், விண்ணப்ப முறையை எளிதாக்கவும், அண்ணா பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக