லேபிள்கள்

15.1.17

பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும் அபாயம் ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சியம்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,600 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மெத்தனமாக உள்ளதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழகத்தில், 3,046 அரசு உயர்நிலை, 2,832 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 24 ஆயிரத்து, 500 முதுநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 4,000 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், நேரடி நியமனம் மூலம், 1,613 இடங்களை நிரப்ப, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


நேரடி நியமன பணிகளை, டி.ஆர்.பி., மூலம் நடத்த வேண்டும். அரசு வேலைவாய்ப்பு துறையின் பதிவு மூப்பு பட்டியல் பெற்று, அதன்பின், முதுநிலை பட்டதாரிகளை, ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு, தமிழக பள்ளி கல்வித்துறை, டி.ஆர்.பி.,க்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த ஒப்புதலை வழங்கி, 10 மாதங்களாகியும், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலர் உமா ஆகியோர், ஆசிரியர் தேர்வு பணியில் தீவிரம் காட்டாமல் உள்ளதாக, கல்வித் துறையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
காலி பணியிடங்களை நிரப்ப, அரசே ஒப்புதல் அளித்தும், டி.ஆர்.பி., அதிகாரிகள் 'ஆமை' வேகத்தில் செயல்படுகின்றனர். 
பல அரசு பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறையால், பிளஸ் 2 மாணவர்களுக்கு உரிய காலத்தில், பாடங்களை முடிக்க முடியவில்லை. பெற்றோர் கடன் வாங்கி, பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்ப வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக