லேபிள்கள்

10.8.17

காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் ஐகோர்ட்டு உத்தரவு

காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை நிரப்புவதற்கு தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தேர்வு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை 1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து கடந்த மே மாதம் 9-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில், 40 முதல் 70 சதவீத உடல் ஊனம் உள்ளவர்கள் மட்டுமே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஊனத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, மொத்த இடங்களில் 4 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும். ஆனால், 3 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்குவதாக கூறி, அதைவிட குறைவான இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியும், உடல் ஊனம் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கியும் புதிய அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடை விதிப்பு

இந்த மனு கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம், ஆனால், அந்த தேர்வின் முடிவை வெளியிடக்கூடாது என்று ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது.

இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் பதவிக்கான தேர்வில், மாற்றுத்திறனாளிகளின் உடல் ஊனம் தகுதியை அறிவியல்பூர்வமாகவும், அறிவார்ந்த முறையிலும் நிர்ணயம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. தற்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதி மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், இதற்காக அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளது என்றும் கூறினார்.

நிரப்பலாம்

தற்போது 3,456 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாமல் கிடப்பில் போடப்பட்டால் அது மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த பணியிடங்களில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன்படி, மொத்த காலிப்பணியிடங்களில் சுமார் 140 இடங்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்ப வேண்டும். எனவே, இந்த 140 இடங்களை மட்டும் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தடை விதிக்கிறோம். மற்ற இடங்களை நிரப்பிக்கொள்ளலாம். இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக