லேபிள்கள்

10.9.17

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற 10, 12ம் வகுப்பு மாணவர்கள்

:ம.பி.,யில், திறந்த நிலை பள்ளி கல்வியில் படித்த மாணவர்கள், தேர்வு எழுதாமலே, 10, 12ம் வகுப்புகளில்,
தேர்ச்சி பெற்ற மோசடி குறித்த தகவல் அம்பலமாகி உள்ளது.என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்நிறுவனம் சார்பில், திறந்த நிலை அடிப்படை கல்வி திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.புகார்இந்த ஆண்டு, மார்ச் - ஏப்ரலில் நடந்த, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில், நாடு முழுவதும், இரண்டு லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர்.முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், ம.பி.,யில், திறந்த நிலை பள்ளி கல்வி தேர்வில், முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. தேர்வு எழுதாமலேயே, 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பலர், தேர்ச்சி பெற்றுள்ளதாக புகார்கள் வந்தன. இது பற்றி விசாரிக்க, மூன்று பேர் கமிட்டியை, திறந்த நிலை கல்வி நிறுவனம் நியமித்தது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி, தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்திடம் அறிக்கை கொடுத்தது.
முறைகேடு
இந்த அறிக்கை குறித்து, என்.ஐ.ஓ.எஸ்., தலைவர், சந்த்ரா சர்மா, டில்லியில் கூறியதாவது:ம.பி.,யில், என்.ஐ. ஓ.எஸ்., தேர்வுகள் நடந்த, ரட்லம், உமாரியா, சீஹோர் ஆகிய மையங்களில், முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இங்கு, பல மாணவர்கள், தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றுள்ளதாக, விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இது பற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் புகார் செய்துள்ளேன்; விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என, கேட்டு கொண்டுள்ளேன்.சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் தான், உண்மை தெரியும். ம.பி.,யில், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற, ௧,௦௦௦க்கும் அதிக மானோரின் முடிவுகள், ரத்து செய்யப்பட்டு விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், 'என்.ஐ.ஓ.எஸ்., தலைவரிடமிருந்து, புகார் கடிதம் வந்துஉள்ளது. இது பற்றி, அரசு பரிசீலித்து வருகிறது' என்றன.ஆம் ஆத்மி கோரிக்கைம.பி.,யில் நடந்த முறைகேடு குறித்து, மாநில, ஆம் ஆத்மி அமைப்பாளர், அலோக் அகர்வால் கூறுகையில், ''ரட்லம் தேர்வு மையத்தில், 693 பேர் தேர்வு எழுத வேண்டும். ஆனால், ௧௯ பேர் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். ''ஆனால், 693 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது போல், மற்ற மையங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. இது பற்றி, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக