அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதியம் தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பணியை தவிர்த்து மற்ற பணிகளை
மேற்கொள்வதாகவும், இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழன்பன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேற்கொள்வதாகவும், இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழன்பன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அரசு பள்ளி ஆசிரியர்கள் பெற்று வரும் ஊதியம் குறித்த விவரத்தை முழுமையாக தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.42 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும், 30 வருடம் அனுபவம் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.91 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும் அரசு வக்கீல் தெரிவித்தார்.
அரசின் நிலைப்பாடு என்ன?
அப்போது நீதிபதி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் அரசு தனது பங்களிப்பு தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு தொகையை அரசு ஏன் செலுத்தவில்லை?, எத்தனை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்படாமல் உள்ளது?, எப்போது செலுத்தப்படும்? என்பது குறித்த அறிக்கையை தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், ஓய்வூதியம் தொடர்பான அரசின் நிலைப்பாடு குறித்தும் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பின்னர், விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
வக்கீல்கள் முறையீடு
இதன்பின்பு, ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான கோர்ட்டு உத்தரவுகளை விமர்சனம் செய்பவர்கள் மீதும், நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வக்கீல்கள் சிலர் நீதிபதியிடம் முறையிட்டனர்.
மேலும் அவர்கள், ‘நீதிபதிகள் பற்றி தரக்குறைவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதை கட்டுப்படுத்த சென்னை போலீஸ் கமிஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றும் கூறினர்.
அப்போது குறுக்கிட்ட அரசு சிறப்பு வக்கீல் ராஜகோபாலன், இந்த குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விமர்சித்து கடிதம்
இதைதொடர்ந்து நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:-
கோர்ட்டு எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதை விமர்சனம் செய்வதற்கென்றே சிலர் இருக்கின்றனர். தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள் கூட கோர்ட்டு உத்தரவு என்ன? என்பதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் பேசுகின்றனர்.
ஒரு பெண் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஒருவர் உத்தரவு பிறப்பிக்கிறார். உடனே அந்தப்பெண்ணும், உத்தரவு பிறப்பித்த நீதிபதியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என விமர்சிக்கின்றனர். ஹெல்மெட் கட்டாயம் என்று நான் உத்தரவு பிறப்பித்த போதும், அதை விமர்சித்து கடிதங்கள் வந்தன.
ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
அவற்றில் 80 சதவீத கடிதம் எதிர்மறையானவை. சில கடிதங்களில் நான் இதுவரை யாரிடமும் வாங்காத அளவுக்கு வசைபாடப்பட்டேன். உங்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியுமா?, குண்டும், குழியுமான ரோடுகளில் மனைவியுடன் சென்று இருக்கிறீர்களா? என்றெல்லாம் கூட விமர்சித்து இருந்தார்கள். தற்போதும் விமர்சிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின்பு, தற்போதைய விமர்சனங்களுக்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் என்று முறையீடு செய்த வக்கீல்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக