லேபிள்கள்

13.10.17

ஏழாவது சம்பள கமிஷனில் ஏமாற்றம் : அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகி குமுறல்

''ஆறாவது சம்பள கமிஷன் குறைபாடுகளை நீக்குவதற்குள், ஏழாவது கமிஷன் மூலம் உயர்வு அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது,'' என அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர், செந்தில் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: தமிழக அரசின் ஆறாவது சம்பள கமிஷனில், அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றோம். அதற்கு அரசு இன்னும் தீர்வு காணவில்லை. மத்திய அரசு டாக்டர்கள், நான்கு ஆண்டிற்குள் பதவி, சம்பள உயர்வு பெற்று விடுவர். அதே பதவி, சம்பள உயர்வு பெற நாங்கள், 11 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் சம்பளத்தில், 75 ஆயிரம் ரூபாயை இழக்கிறோம். அரசு கல்லுாரி, பல்கலை பேராசிரியருக்கு பல்கலை மானியக்குழு அறிவித்த சம்பளம் வழங்கப்படுகிறது. 
ஆனால், அவர்களை விட குறைவான சம்பளத்தைத்தான் அரசு டாக்டர்கள் பெறுகின்றனர். இது போன்று பிரச்னைக்கு தீர்வு காணாமல், ஏழாவது சம்பள கமிஷன் மூலம் உயர்வு அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்த அறிவிப்பை கூட, 2016 ஜனவரியில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், 21 மாத கால தாமதத்திற்கு பின், அரசு அறிவித்துள்ளது. தற்போது, 'டெங்கு' சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை தரும் பணியில் உள்ளோம்.
டெங்கு பிரச்னை இல்லாமல் இருந்திருந்தால் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்போம். டெங்கு கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் திறம்பட செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக