சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தும், தமிழக அரசின் முடிவுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அதேபோல, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான சேர்க்கையும், இந்தாண்டு முதல், நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், 'தமிழகத்தில், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பாக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது.கடிதத்தில், 'தமிழக தொழில் முறை கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை சட்டம், 2006ன்படி, மாநில அரசின் கொள்கை முடிவை மீறி, இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு, நீட் தேர்வை அறிமுகம் செய்ய முடியாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு பதில் அளித்துள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம், 'நீட் தேர்வு அடிப்படையில் தான், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்தக்கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்' என, தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக