லேபிள்கள்

15.7.18

மாணவர்களின் சீருடை நிறத்திலேயே உடை அணியும் தலைமையாசிரியை!

வகுப்பறையில் கற்பிக்கும் சூழலுக்காக, மாணவ - மாணவியரின் சீருடை நிறத்திலேயே, பெண் தலைமை ஆசிரியை, சீருடை அணிந்து வருகிறார்.
தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டு

முதல், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு, சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடர்பச்சை நிறத்தில் கால்சட்டையும், வெளிர்பச்சை நிறத்தில் சட்டையும், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கே.ராமநாதபுரத்தில், இயங்கும் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக வாசுகி உள்ளார். இவருடன் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியாற்றுகிறார்.இவர்கள், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம், 35 குழந்தைகளுக்கு கல்வி போதிக்கின்றனர். கல்வித்துறை உத்தரவின் படி, இப்பள்ளி குழந்தைகள், புதிய சீருடைக்கு மாறியுள்ளனர்.
குழந்தைகள் அணிந்து வரும் சீருடை நிறத்திலேயே, தலைமை ஆசிரியை வாசுகியும், சீருடை உடுத்தி வரும் வழக்கத்தை கையாண்டு வருகிறார். வகுப்பறை சூழலில், குழந்தைகள் ஆசிரியரை வேறுபடுத்தி பார்க்காமல் இருக்கவும், சகஜமான அணுகுமுறைக்காகவும், அதே நிறத்தில் சீருடை அணித்து வருவதாக, தலைமை ஆசிரியை வாசுகி கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:வகுப்பறையில் ஆசிரியரின் நடவடிக்கை மற்றும் செயலை வைத்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்வர்.அனைத்து குழந்தைகளையும், வகுப்பறை சூழலுக்கு ஒருங்கிணைத்து போதிக்க, அணுகுமுறை அவசியமாகிறது. குழந்தைகளை நல்வழிப்படுத்தம் பொறுப்பு நல்ல ஆசிரியருக்கு உள்ளது. என்னுடைய ஆசிரியை, என்னுடைய வகுப்பு, என்னுடைய மாணவர்கள் என்ற புரிதலை உருவாக்க வேண்டும்.
அப்துல் கலாம் இறப்புக்கு பின், குழந்தைகள் அணிந்துள்ள சீருடை நிறத்திலேயே, நானும் சீருடை அணிந்து வருகிறேன். இதனால், குழந்தைகள் என்னிடம், நம்பிக்கை, பாசம், அன்பு கலந்த அணுகுமுறையில் பழகுகின்றனர்.சீருடை மாற்றத்துக்கு முன், குழந்தைகள் அணிந்து வந்த, இளஞ்சிகப்பு மற்றும் சந்தன கலரில் நானும், வகுப்புக்கு தினமும் சீருடை உடுத்தி வந்தேன்.
தற்போது, குழந்தைகளை போல நானும், புதிய சீருடைக்கு மாறியுள்ளேன்.குழந்தைகள் அணிந்துள்ள நிறத்திலேயே, சீருடை அணிந்து வருபவர்களில், தமிழகத்தில் முதல் பெண் தலைமை ஆசிரியை நானாக தான் இருப்பேன். இந்த சீருடை அணிந்து வரும் முறையை, என்னுடைய பணிக்காலம் முடியும் வரை தொடர்வேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விருதுகளை குவிக்கும் தலைமை ஆசிரியை
கடந்த, 2004ல், இந்திய அளவில், கற்றலில் புதுமை ஏற்படுத்திய ஆசிரியை விருது, 2006ல், காமராஜர் நல்லிணக்க விருது மற்றும் பசும்பொன் தேவர் விருது, 2012ல் தமிழக அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 2017ல் தேசியளவில் நல்லாசிரியர் விருது ஆகியவற்றை வாசுகி பெற்றுள்ளார். தவிர, பிரஞ்ச் அசோசியேஷன் விருது, சிகரம் தொட்ட ஆசிரியர் விருது என, தலைமை ஆசிரியை வாசுகி விருதுகளை குவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக