லேபிள்கள்

31.3.13


எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் தண்டவாளத்தில் விழுந்து நாசம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது தமிழ் முதல் தாளில் எடுத்த மதிப்பெண் 2–வது தாளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிப்பு


எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 27–ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதி வருகிறார்கள். தேர்வை நல்லபடி நடத்த வேண்டும் என்ற பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவின் பேரில், அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி மற்றும் அதிகாரிகள் தேர்வு பணியில் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் தமிழ் 2–ம் தாள் தேர்வு எழுதிய மாணவர்களில் விடைத்தாள்கள் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் தபால் நிலையம் மூலமாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நாடி முத்துநகரில் உள்ள தேர்வு மையத்திற்கு அனுப்புவதற்காக விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தண்டவாளம் அருகே கிடந்தது
அப்போது சில விடைத்தாள்கள் மாயமாகி தண்டவாளம் பகுதிகளில் தீயிட்டு எரிந்த நிலையில் கிடந்தது. இந்த சம்பவம் தேர்வு எழுதிய மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும் கலக்கம் அடைய செய்தது.
விடைத்தாள்கள் எரிந்ததால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தமிழ் 2–வது தாள் மறுதேர்வு நடத்தப்படுமா? அல்லது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் கடும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி, மாணவர்களுக்கு பாதிப்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும், மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறியிருந்தார். இது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது.

முதல் தாள் மதிப்பெண் வழங்கப்படும்
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2–வது தாள் சேதமடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படுமா என்று, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:–
எஸ்.எஸ்.எல்.சி தமிழ் 2–வது தாள் விடைத்தாள்களில் 370 தாள்கள் கொண்ட கட்டில் 63 மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே போல் விடைத்தாள் சேதமடைந்தபோது, 2 தாள்கள் கொண்ட தேர்வில், சேதமடையாத தாள்கள் கொண்ட தேர்வில் என்ன மதிப்பெண் எடுத்தார்களோ, அதே மதிப்பெண் சேதமடைந்த விடைத்தாள்களுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல் இந்த 63 மாணவர்களுக்கும் அவர்கள் தமிழ் முதல் தாள் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் தமிழ் 2–வது தாளுக்கும் போடப்படும். எனவே மறுதேர்வு எதுவும் கிடையாது. இவ்வாறு பள்ளிகல்விச் செயலர்  த.சபீதா கூறினார்.

நடவடிக்கை
இதற்கிடையே ரெயிலில் ஏற்றப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் பண்டல் தவறி விழுந்த விவகாரத்தில் கவனகுறைவாக செயல்பட்ட ரெயில்வே அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சிக்கோட்ட ரெயில்வே மேலாளருக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக