பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகுமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு தேர்வு நிலை, பணிமூப்பு பாதிக்காத வகையில் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கணக்கிடப்படுமா?
தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.
பள்ளி கல்வித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி கடந்த 2003ஆம் ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம் தோறும் மூவாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2006ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
ஆனால் தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக கணக்கீடு செய்ய வில்லை என ஆசிரியர்கள் புலம்பித்தவிக்கின்றனர். இதனால் தேர்வு நிலை மற்றும் பணி மூப்பு பாதிக்கப்படும் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் புதிய பென்சன் திட்டத்தில் இவர்களை இணைத்து மாதம் தோறும் ஒரு கணிசமான தொகையும் கடந்த பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பென்சன் திட்டத்தில் வசூலிக்கப்படும் பணம் எந்த கணக்கில் உள்ளது என்பது இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கே தெரியாதநிலை தொடர்கிறது.
எனவே புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென் சன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். தேர்வு நிலை பெறவும், பணி மூப்பு பாதிக்காமல் இருக்கவும் தொகுப்பு ஊதியத்தில் பணி செய்த மூன்றாண்டு காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும். மேலும் பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஜிபிஎப் கடன் இடை நிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காலமுறை ஊதியம் பெறும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக