லேபிள்கள்

28.6.13


மெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால் நடவடிக்கை


               "மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். 
 
             அதற்கும் அதிகமான பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை. எனவே, ஐந்து பிரிவுகளுக்கும் அதிகமாக வகுப்புகளை நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளி மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்துள்ளார்.

                   அவரது அறிக்கை: மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் விதித் தொகுப்பின் படி, ஒரு வகுப்பிற்கு, அதிகபட்சமாக, நான்கு பிரிவுகள் மட்டுமே செயல்பட வேண்டும். கூடுதலாக, ஒரு பிரிவு துவங்க வேண்டும் எனில், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அனுமதி பெற வேண்டும்.

                    ஐந்து பிரிவுகளுக்கு மேல் செயல்பட, விதியில் இடம் இல்லை. எனினும், நடப்பு கல்வி ஆண்டில், சில பள்ளிகளில், எல்.கே.ஜி.,- ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், அதிகமான மாணவரை சேர்ப்பதாக தெரிய வருகிறது. மெட்ரிகுலேஷன் விதி தொகுப்பில் உள்ள விதிகளை ஏற்காமல், அதிக மாணவர்களைக் கொண்டு, ஐந்து பிரிவுகளுக்கு மேல் செயல்படும் பள்ளிகள் மீது, துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

               மாநிலம் முழுவதும், 4,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், பெரும்பாலான பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும், "ஏ&' யில் ஆரம்பித்து, "ஜி&' வரை, ஏழு பிரிவுகள் நடக்கின்றன.

                சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உட்பட மாநிலம் முழுவதும், 3,000த்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளிகளில், இது தான் நிலை.இந்த பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மற்றும் முதல் வகுப்புகளில், அதிகமான பிரிவுகள் இயங்கி வருகின்றன.

              தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறியதாவது: மாணவர் சேர்க்கை நடந்த போது, நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது திடீரென, "பாடப் பிரிவுகளை குறையுங்கள்" என்று கூறினால், எப்படி செய்ய முடியும்? படிக்கின்ற மாணவர்களை, திடீரென, எங்கே அனுப்புவது? அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைகிறது. இதனால், ஏதேதோ நடவடிக்கை எடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக