லேபிள்கள்

24.6.13

ஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி புத்தகங்கள் மூலமே பாடம் - நாளிதழ் செய்தி


           தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால், தமிழ்வழிக் கல்வி புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
 
              அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராம மாணவர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்தும் வகையில், ஆங்கில வழிக் கல்வியை அரசு செயல்படுத்தியது. இந்தாண்டு, மதுரை மாவட்டத்தில் 194 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும், 178 தொடக்க பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் தலா 40 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர்.

             தற்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மீடிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கவில்லை. ஜூன் 10ல் வகுப்புகள் துவங்கிய நிலையில், ஆங்கில வழிக் கல்வி நடத்தும் ஆசிரியர்கள் விவரம், பாட அட்டவணை குறித்தும் பள்ளிகளில் இன்னும் வரையறை செய்யப்படவில்லை என்று, பெற்றோர் கூறுகின்றனர்.

           ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஆங்கில வழிக் கல்வி வகுப்பில், ஒவ்வொரு பள்ளியிலும் 40 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், ஆங்கில வழிக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கவில்லை. கல்வி அதிகாரிகளிடம் கேட்டால், "புத்தகங்கள் விரைவில் வந்துவிடும். அதுவரை ஆங்கில அடிப்படையை கற்றுக்கொடுங்கள்" என்கின்றனர். இதனால், தமிழ் வழிக் கல்வி புத்தகங்களை வைத்துத்தான் பாடம் நடத்துகிறோம், என்றனர்.

           மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயலட்சுமி கூறுகையில், "தாமதமாக ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் தான் இப்பிரச்னை உள்ளது. உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் சென்று ஆசிரியர்கள் வாங்காமல் உள்ளனர். ஒரு வாரத்திற்குள் அனைத்து புத்தகங்களும் வழங்கப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக