லேபிள்கள்

22.6.13


சீருடை அணிந்திருந்தாலே பஸ்சில் இலவச பயணம்: போக்குவரத்து துறை வாய்மொழி உத்தரவு

         
         பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்' என, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது.
 
           மாணவ, மாணவியரின் நலன் கருதி, இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவருக்கு, இலவச பஸ் பாஸ், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில், அட்டையாக வழங்கப்பட்ட பஸ் பாஸ், கடந்த ஆண்டு, ஸ்மார்ட் கார்டாக உருமாற்றம் செய்யப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும், இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 
 
          எனினும்,சென்னை, மாநகர போக்குவரத்து கழகம்- 3.50 லட்சம்; விழுப்புரம் போக்குவரத்து கழகம்- 4.79 லட்சம்; சேலம் போக்குவரத்து கழகம்- 2.79 லட்சம் பேர் என, அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம், பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், 2013 - 14ம் ஆண்டில், 14.02 லட்சம் பேருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்க, 323.70 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. விரைவில் பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது, போக்குவரத்து துறையிடம் உள்ள, மாணவர்களின் பட்டியல், கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்பட்டியலை, சரிபார்க்கும் பணியில், கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. திருத்தப்பட்ட பட்டியல் கிடைத்த உடன், பஸ்பாஸ் தயாரிப்பு பணியில், போக்குவரத்துத் துறை ஈடுபடும் என, தெரிகிறது. 
 
          காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில், பழைய பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவரை, இலவசமாக பயணிக்க அனுமதிக்கின்றனர்; சில பகுதிகளில், டிக்கெட் வசூல் செய்யப்படுகிறது; பல பகுதிகளில், மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும்படி, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என, மாறுபட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, இக்குழப்பமான சூழ்நிலைக்கு தீர்வு காண, பஸ் பாஸ் திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக