லேபிள்கள்

11.8.13

பள்ளிகளில் "செஸ்" போட்டிகள் நடத்த வேண்டும்: அரசு உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகளில் "செஸ்" போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழ், ஆங்கில மொழி வாசிப்பு திறனுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கில மொழிகளில் எழுத, படிக்க தெரிந்திருப்பதை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் 31ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்

கடந்த ஆண்டுகளில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பொது தேர்வு சதவீதத்தையும், இந்த ஆண்டு சதவீதத்தையும் ஒப்பிட்டு சதவீதம் குறைந்த பள்ளிகளில் இதற்கான காரணங்களை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு பள்ளியில் மாணவர் நலனுக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் பிற பள்ளிகளிலும் இதனை அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை பள்ளிகளில் செஸ் போட்டி நடத்தப்பட வேண்டும். இதில் குறைந்தது 10 சதவீத மாணவர்களாவது பங்கேற்க செய்ய வேண்டும்.

 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் கொடியேற்றி பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு கூட்டத்தை நடத்த வேண்டும். வரும் 31ம் தேதி பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

பள்ளிகளில் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும். பள்ளிகளில் அரசு மூலம் வழங்கப்படும் விலையில்லா பொருட்களுக்கு பள்ளிகளில் எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது

கல்வி உதவி தொகை, விலையில்லா பஸ் பாஸ் விண்ணப்பங்களை இலவசமாக வழங்க வேண்டும். இதில் கட்டணம் ஏதும் வசூலித்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர், மாணவர் விரோத செயல்களில் எவரும் ஈடுபட கூடாது. பள்ளிகளில் சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், பசுமை படை இயக்கம் உட்பட அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்பட வேண்டும்." இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக