லேபிள்கள்

27.12.13

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: 49 ஆயிரம் மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதில் தாமதம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இந்தக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 49 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை.

அரசு அறிவிப்பின்படி, இந்த மாணவர்களுக்கான முதல் தவணை செப்டம்பர் மாதத்திலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் மாதம் முடியும் நிலையில் இதுவரை கட்டணத்தை அரசு வழங்கவில்லை என தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் 25 சதவீதம் ஏழை மற்றும் சமூகரீதியாக நலிவடைந்த மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே திருப்பி வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் நடப்புக் கல்வியாண்டில் (2013-14) மெட்ரிக் பள்ளிகளில் 18 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 49 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணம் அல்லது அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆகும் செலவு இவற்றில் எது குறைவோ அந்தக் கட்டணத்தை இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்காக அரசு திருப்பி வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் செப்டம்பர், ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களில் மூன்று தவணைகளாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை இந்த மாணவர்களுக்கான கட்டணம் வழங்கப்படவில்லை. இது குறித்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் இது குறித்து கூறியது:
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு இதுவரை அரசு கட்டணத்தைத் திருப்பி வழங்கவில்லை. இந்த ஆண்டுக்கான கட்டணத்தை வழங்கவில்லையென்றால், அடுத்த ஆண்டில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்கமாட்டோம் என அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டணத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்று தனியார் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையைக் கோரி மத்திய அரசுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தத் தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு நிதியை வழங்கிய பிறகே, தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் திருப்பி வழங்கப்படும். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களுக்கான கட்டணம் வழங்கப்படும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக