காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மாதந்தோறும் காலம் தாழ்த்தி சம்பளம் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில், பகுதிநேர சிறப்பு
ஆசிரியர்கள் (ஓவியம், தையல், இசை, விளையாட்டு) கடந்த 2011 - 12ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மாதந்தோறும் 5,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
675 பேர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 786 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக 161 பேர் பணியிலிருந்து விலகி விட்டனர். தற்போது, மாவட்டம் முழுவதும் 625 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் 5,000 ரூபாய் போதுமானதாக இல்லை எனவும்; அதை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், தொகுப்பூதியமாக வழங்கப்படும் 5,000 ரூபாயை, மாதந்தோறும் உரிய காலத்தில் வழங்குவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வரும் இந்த பிரச்னை, தற்போது வரை நீடித்து வருகிறது. மாதந்தோறும் 4ம் தேதி முதல் 8ம் தேதிக்குள் கிடைக்கும் சம்பளம், இந்த மாதம், இன்று காலை வரை கிடைக்கவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிரமம்: தொகுப்பூதியமாக கிடைக்கும் 5,000 ரூபாய், குடும்ப வருமானத்திற்கு முக்கிய பங்காக இருந்து வரும் நிலையில், அதை மாதந்தோறும் காலம் தாழ்த்தி வழங்குவதால், சிறப்பு ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், மாவட்டத்தில் உள்ள சிறப்பு ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீத்தாலட்சுமி கூறுகையில், "மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறப்பு ஆசிரியர்களுக்கும், சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. மாதந்தோறும் உரிய காலத்திற்குள் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக