லேபிள்கள்

13.11.14

வெளிநாடு சென்ற ஆசிரியைக்கு சம்பள பிடித்தம் செய்ய தடை: ஐகோர்ட் உத்தரவு

விடுப்பில் வெளிநாடு சென்ற ஆசிரியையின் சம்பளத்தை பிடித்தம் செய்யும் பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலர் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. பரமக்குடி பாரதியார் நடுநிலை பள்ளி இடைநிலை ஆசிரியை விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு:

எனது மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு உதவ, 2014 ஜூன் 11 முதல் அக்.,5 வரை அமெரிக்கா செல்ல பள்ளிக்குழு ஈட்டா விடுப்பு அனுமதித்தது. பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
நான் ஊருக்கு திரும்பியதும் செப்.,16 ல் பணியில் சேர்ந்தேன். விடுப்பில் சென்ற 97 நாட்களுக்கான சம்பளம் அனுமதிக்கக்கோரி, பள்ளி நிர்வாகம் ராமநாதபுரம் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்தது. ஆனால் இயக்குனரின் முன் அனுமதியின்றி வெளிநாடு சென்றதாகக்கூறி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அந்நடவடிக்கை முடிந்த பின் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவித்து, விண்ணப்பத்தை பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலர் நிராகரித்தார். தனியார் பள்ளி விதிகள்படி, பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தால் போதுமானது. நான் அளித்த தகவல்களை, கல்வி அதிகாரிகளிடம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனுமதியில்லாமல் வெளிநாடு சென்றதாகக் கூறுவது தவறு. உதவி துவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜரானார். உதவி துவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவிற்கு நீதிபதி தடை விதித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக