லேபிள்கள்

10.3.15

ஆசிரியர் இல்லை; வகுப்பு இல்லை: பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள்

சென்னையில், கல்வி அதிகாரியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அரசுபள்ளியில்,ஓராண்டாக, பிளஸ் 2 வகுப்புக்கு ஆசிரியரே இல்லை. இதனால்,
பாடமே நடத்தாமல், பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி, சிக்கலில் உள்ளனர்.
சென்னை, எழும்பூரில், தெற்கு கல்வி மாவட்ட அதிகாரி அலுவலக வளாகத்தில், அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பிரிவில், கணிதம் - கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் - உயிரியல், அறிவியல் - தாவரவியல் - விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் - வணிகக் கணிதம், பொருளாதாரம் - வணிகவியல் உள்ளிட்ட, ஐந்து பிரிவுகள் உள்ளன.

பாடம் நடத்தவில்லை:

இவற்றில், 200 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஓர் ஆண்டாக, இங்கு ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரவியல், வணிகவியல், கணிதவியல் போன்ற பிரிவுகளில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களுக்கு பாடம் நடத்தவில்லை. மாணவர்கள் அடிக்கடி புகார் அளித்ததால், எப்போதாவது, ஒரு முறை வெளியில் இருந்து சில ஆசிரியர்களை அழைத்து வந்து, பெயரளவில் பாடம் நடத்தியுள்ளனர். அதனால், இப்பள்ளி மாணவர்கள் பாடமே தெரியாமல் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். எதையாவது எழுதி தேர்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலைக்கு இப்பள்ளி மாணவர்கள் ஆளாகியுள்ளனர். இப்பள்ளி மாணவர்களுக்கு எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மோசமான நிலை:

நேற்று, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் தங்களின் மோசமானநிலை குறித்து கூறியதாவது: ஆங்கிலம் முதல் தாள் வினாக்கள் எளிமையாக இருந்ததாக, இங்கு தேர்வு எழுதிய மற்ற பள்ளி மாணவ, மாணவியர் தெரிவித்தனர். ஆனால், எங்களுக்கு பாடமே என்னவென்று தெரியாது. ஆங்கிலம் உட்பட, ஐந்து பாடங்களுக்கு கடந்த, ஓர் ஆண்டாக ஆசிரியரே இல்லை. எப்போதாவது ஒரு ஆசிரியர் வந்து புத்தகத்தில், சில பக்கங்களை குறித்துக் கொடுத்து விட்டு சென்று விடுவார். மொத்தத்தில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், நாங்கள் எப்படி தேர்ச்சி பெறப் போகிறோம் என்பதே கேள்விக்குறியாகத் தான் உள்ளது. ஒரு சிலர்,தனியார் டியூஷனில் படித்ததை வைத்து தேர்வு எழுதுகிறோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, சென்னை தெற்கு கல்வி மாவட்ட அதிகாரியிடம் கேட்டபோது, 'இரண்டு ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஜூனில், நிச்சயம் நிரப்பி விடுவோம். சில ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பில் உள்ளனர்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக