லேபிள்கள்

14.4.15

சத்துணவு சமையல் வேலை பார்க்க சொல்வதா: ஆசிரியர்கள் கொந்தளிப்பு

சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்ட அறிவிப்பால், சத்துணவு சமைத்துப் போடும் பணி செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனால், ஆசிரியர்கள் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள், நாளை முதல் கால வரையற்ற போராட்டம் அறிவித்து உள்ளனர். எனவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சத்துணவுக் கூடங்களை திறந்து, சமையல் செய்து, மாணவ, மாணவியருக்கு சாப்பாடு போட வேண்டும்; இதற்கு தலைமை ஆசிரியர்கள், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கல்வித் துறை வழியே, சமூகநலத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். மாவட்ட கலெக்டர்கள் மூலம், வாய்மொழியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது; இதற்கு தலைமை ஆசிரியர்கள், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலரும், 'ஜேக்டோ' கூட்டுக்குழு உயர்மட்ட உறுப்பினருமான, சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது: ஆசிரியர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது தான் பணி; சத்துணவு சமைப்பது ஆசிரியர்கள் பணியல்ல. எனவே, ஆசிரியர்களுக்கும், சத்துணவு ஊழியர்களுக்கும் இடையே தேவையற்ற விரோத மனப்பான்மையை வளர்க்காமல், ஊழியர் விரோத நடவடிக்கைகளை, தமிழக அரசு கைவிட வேண்டும். சத்துணவு வழங்குவதை மேற்பார்வையிடும் தலைமை ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்களை, சத்துணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட நிர்பந்திக்க முடியாது. ஆனால், சத்துணவுப் பணிகளை மேற்கொள்ள, ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகங்கள் வழியே அரசு உத்தரவிடுவது, கண்டனத்துக்குரியது. அரசு அதிகாரிகள் சத்துணவு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையில், ஆண்டு தேர்வு நடக்கும் நிலையில், சத்துணவை நிறுத்தினால், பள்ளிக்கு பசியுடன் வந்து செல்ல முடியுமா; இந்த ஆண்டு தேர்வு எழுத முடியுமா என, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவியர் அச்சத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக