அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது. கூடுதல் ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படாததால், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் விகிதத்தை விட, 2,500 பட்டதாரி ஆசிரியர்களின் அதிகம் இருப்பது தெரிய வந்தது.
இவர்களை, பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு, கட்டாய இடம் மாற்றம் செய்யும் பணி நிரவல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. ஆசிரியர்கள் எதிர்ப்பை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடம் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறைவாகவே இருந்தன. எனவே, சொற்பமான ஆசிரியர்களே இடம் மாற்றம் செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீண்டும் அதே பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களாகவே நீடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.ஆனால், வட மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் போன்ற மாவட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவை உள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு வர, பிற மாவட்ட ஆசிரியர்கள் தயாராக இல்லாததால், தென் மாவட்டங்களில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள், வட மாவட்டங்களுக்கு மாற்றப்படவில்லை. இதுபோன்ற குழப்பங்களால், சில மாவட்டங்களில், மாணவர்கள் எண்ணிக்கையை விட கூடுதலான ஆசிரியர்கள் பணியில் இருக்கும் நிலை தொடர்கிறது. மறுபுறத்தில், பல மாவட்டங்களில் போதிய ஆசிரியர்கள் இன்றி, வகுப்புகள் நடக்காமல் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக